பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத்திறன் Y 127

இயல் - 7

வருணனைத் திறன்

இயற்கைப் பொருள்கள் அனைத்தும் அழகு கொழித்து நிற்கும் ஆண்டவனின் அற்புதப் படைப்புகள். இவற்றை நக்கீரர் பெருமான் “கை புனைந்தியற்றாக்கவின்பெருவனப்பு” என்று கூறுவர்.இயற்கைக் காட்சிகளைக் காணும் ஓவியக் கலைஞன் தூரிகையையும் வண்ணங்களையும் கொண்டு அழகான படங்களாகக் காட்டுவான். அக்காட்சிகளைக் கவிஞன் ஒருவன் தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு சொல்லோவியங்களாக வரைந்து காட்டுவான். ஆனால், இருவரும் காட்சிகளைக் காண்பது போன்றே எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் காட்டுவதில்லை. சில கூறுகளைக் கூட்டியும், குறைத்தும், திரித்தும் அவை கூறப்பெறுகின்றன. உள்ளவற்றை உணர்ச்சியுடன் கூறும்பொழுது கூட்டலும், குறைத்தலும், திரிபும் நேர்தல் இயல்பாகும். அறிவு எதனையும் அளந்து அறியும் தன்மையுடையது. உணர்ச்சியோ குறித்த ஒன்றை ஆழ்ந்து அறியும் தன்மையுடையது. எனவே, பின்னைய செயலில் குறித்த ஒன்றினைத் தவிர, ஏனையவை அவ்வளவு தெளிவாக நிற்பதில்லை. ஒரு பொருளின் ஒரு கூறு மட்டிலும் தெளிவாக - மிகுதியாக - உணர்த்தப் பெற, மற்றவை மங்குகின்றன; அல்லது மறைகின்றன. கவிஞர்கள் காட்சிகளை வருணிப்பதில் அவர்களின் உணர்ச்சியின் காரணமாக ஒன்று அல்லது சில சிறந்து நிற்பதால் மற்றவை சிறப்பிழந்து மறைகின்றன. ஆனால், கவிதைகளைப் படிப்போர் அக்குறைவினை உணர்வதில்லை. ஒரே விதக் காட்சியினைப் பலர் வருணிக்கும்போது காட்சி வேறுபட்டாலும் படிப்போருக்கு அது மகிழ்ச்சியைத் தருகின்றது.

மருதநிலச் சூழ்நிலையில் அமைந்திருக்கும் திருக்கோவலூர்’ இவ்வாறு வருணிக்கப்படுகின்றது.

1. காட்டுப்பாடி-விழுப்புரம் இருப்பூர்தி வழியில் திருவண்ணாமலைக்கு அடுத்த ஒரு வைணவத் தலம்; தென்பெண்ணை ஆற்றங்கரையின் தென்பால் உள்ளது.