பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 v. பாவேந்தரின் பாட்டுத்திறன்

இயல் - 9

கவிஞர் நோக்கில் இயற்கை

இயற்கையைத் தொல்காப்பியம்"கருப்பொருள்” என்று கழறும் சைவ சித்தாந்தம் “பாசம்” என்று பகரும். வைணவ சித்தாந்தம் “அசித்து” என்ற தத்துவமாக விளக்கும். இவற்றையெல்லாம் அந்தந்த தலைப்புகளை விளக்கும் நூல்களைப் பயின்று அவற்றை அநுபவிப்பதே ஒரு தனி இன்பமாகும்.

பாரதிதாசன் நாம் வாழ்ந்த காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கக் காலப் பகுதியிலும் வாழ்ந்த பெருங்கவிஞர். இவர் சங்ககாலப் புலவர்களைப் பின்பற்றியும் காப்பியப் புலவர்களைப் பின்பற்றியும் இயற்கையை வருணிப்பார். சங்கப்பாடல்களில் பத்துப்பாட்டு, கலித்தொகை, அகநானூறு போன்ற சற்று நீளமாக அமையும் பாடல்கள்தாம் முதல், கருப்பொருள்கள் வருணனைக்கு இடந்தரும்.நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறுப் பாடல்களில் கருப்பொருளைச் சுட்டிச் செல்வதற்கு மட்டிலுமே இடத்தரும். ஆனால், இந்தக் கருப்பொருள்கள் புலவர்கள் உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள் அமையப் பாடல்களைப் பாடுவதற்குப் பெருந்துணைபுரியும். இவற்றையெல்லாம் ஈண்டு விளக்கிப் போவதற்கு இடம் இல்லை. எனினும் ஆங்காங்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சுட்டிச் செல்லலாம் எனக் கருதுகின்றேன்.

இயற்கைக்கு அறிமுகம் தேவை இல்லை. இயற்கை ஐம்பெரும் பூதங்களால் ஆனது நமது உடலும் ஐம்பெரும் பூதங்களால் ஆனது. ஏதோ மனிதனின் சிந்தனைக்கும் எட்டாத ஒரு நியதிப்படி நாம் இயற்கையையொட்டிப் பிறந்து, அதன் மடியிலே வளர்ந்து, இறுதியில் அதனோடு கலந்து விடுகின்றோம். அறிவும் உணர்வும் இணைந்த மானிட வாழ்வில் இயற்கையை அறிந்து சொன்னவன் அறிஞன்; உணர்ந்து சொன்னவன் கவிஞன். சங்க இலக்கியத்தில் அச்சமூட்டும் பெருமிதமான இயற்கைக் காட்சிகளும் உண்டு அமைதி தவழும் மென்மையான இயற்கைக் காட்சிகளும் அங்கு உண்டு; அந்த