பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை 175

இலக்கியத்தின் மையம் மானிட வாழ்வு; இயற்கை அதற்கு உறு துணையாய் இரண்டாம் இடமே பெறுகின்றது.’

சங்கப் பாடல்கள் யாவும் சங்கப் புலவர்கள் நேரடியாகப் பெற்ற அநுபவத்தால் பாடியவை; தமக்கு வாய்த்திருந்த நல்ல இயற்கைச் சூழ்நிலையை இயல்பான சுவையுணர்வோடு நுகர்ந்ததன் விளைவாக எழுந்தவை. புறத்தே நிகழ்வனவற்றைக் கலை உணர்வுடன் நோக்கும் திறமை அவர்கட்குக் கைவந்திருந்தது. அண்மையிலும் சேய்மையிலும் இருந்த உயிருள்ளனவும் இல்லனவும். வலியனவும் மெலியனவும் ஆகிய இயற்கைப் பொருள்கள் அவர்களின் கருத்தை ஈர்த்தன. தம்மைச் சூழ்ந்திருந்த நீர்நிலைகளையும், வானத்தையும், வயல் வெளிகளையும், மலைச் சாரல்களையும் தாமே நன்கு நுகர்ந்து, அந்நுகர்ச்சியினைக் கவிதையாக வடித்தார்கள். புலன் நுகர்ச்சிகளின் முழுமனத்தோடு ஈடுபடும் தமது தனித் திறமையால் இயற்கையை முழுமையாகவும் நுட்பமாகவும் கண்டார்கள். எந்தச் சிறு பகுதியையும் புறக்கணிக்காமல் கடிது நோக்கி உணர்ந்தார்கள். தம் உணர்வைத் தக்க சொற்களால் கவிதையில் தொடுத்தார்கள். எனவே, அவர்களின் கவிதையில் எல்லாம் தம் வாழ்விற்குத் துணை நின்ற இயற்கையின் பல்வேறு வடிவங்களை நுண்ணுணர்வோடு கண்டுணர்ந்த அநுபவத்தின் வெளிப்பாடுகள் என்று கூறுவதில் தவறில்லை:

வானம், வானின் பயனாகிய மழை, மழையின் பயனான செழிப்பு, அருவி, ஆறு, கடல், கதிரவன், திங்கட் செல்வன், சிற்றுார். அங்குக் காணப்படும் ஒடை தென்றற்காற்று, மலை, மேகம், இவை போன்றன வெல்லாம் இயற்கையின் வனப்பைப் பேசாத பேச்சாக எடுத்துரைக்கின்றன. கவிஞர்கள் இவற்றைக் கண்டு மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சிதான் பாவடிவம் பெற்றது. பின்னர் அப்பாடல்களை நாம் படித்து அநுபவிக்கும்போது அவை குறிக்கும் பொருள்கள், காட்சிகள் நம் மனக்கண் முன் தோன்றி மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றன. நம்மை அவற்றில் மேலும் மேலும் ஈடுபடச் செய்கின்றன.

1. மு.வ. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை. பக்கம் 46 2. மு.வ. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை-பக்கம் 500