உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாவேந்தரின் பாட்டுத்திறன் அதுபவித்தவற்றையெல்லாம் நம்மையும் அநுபவிக்கச் செய்யத் துணையாக இருப்பது அவனது இனிய கற்பனை. கற்பனை இல்லாதவர்கட்கு முழுமதியக் காட்சி யாதொரு விதமான உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை. ஆனால், அதே காட்சியைக் கவிஞன் காணும்பொழுது தன்னை மறந்து விடுகின்றான். கானும் முழுமதியம், காண்பவனாகிய கவிஞன், காண்பதால் அவன் அடையும் உணர்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றாகி அவன் வேறு ஒர் உலகிற்குச் சென்று விடுகின்றான். முழுமதியக் காட்சி அவனுடைய மனத்தில் எத்தனையோ எண்ணக் கோவைகளை உண்டாக்கி விடுகின்றது. முழுமதியத்தைக் காணும் நம் மனத்தில் கனவிலும் காண முடியாத கற்பனைகள் கவிஞன் மனத்தில் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் வெறும் நினைவுக் கோவைகள் அல்ல. அவை அவனது மனத்தின் ஆழ்ந்த அடித்தளத்திலிருந்து தோன்றி உணர்ச்சிப் பெருக்கைக் கிளப்பிவிடும் அமுத ஊற்றுகள். அந்த உணர்ச்சிப் பிடிப்பிலிருந்து மீண்ட பிறகே கவிதை பிறக்கின்றது. கவிதை வடிவான அக்கற்பனையிலிருந்தே கவிஞன் அநுபவித்த உணர்ச்சியை நாமும் பெறுகின்றோம்.

கவிஞன் கற்பனை செய்தல் பகற்கனவு காண்பதைப் போன்றது. கனவு காண்பவர்கள் உள்ளதை உள்ளவாறு காண்பதில்லை; உள்ளம் விழையுமாறே காண்கின்றனர். நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றின் அடிப்படையின்மேல் நடக்க வேண்டியவற்றைச் சேர்த்துக் காண்கின்றனர். அப்பொழுதுதான் மனம் அக்கனவில் நெடுநேரம் திளைத்து இருக்க முடியும். கவிஞர்களும் வேறு கலைஞர்களும் படைக்கும் கற்பனையிலும் இதே நிலைதான். உள்ளம் விரும்புமாறு படைக்கும் உணர்ச்சியே பாட்டு, ஒவியம் முதலிய கலைகளுக்கு அடிப்படையாகும். இயற்கையைப் பாடும் கவிஞர்களும் உள்ளதை உள்ளவாறு பாடுவதில்லை; உள்ளதில் சிறிது குறைத்தும் சிறிது கூட்டியுமே பாடுகின்றனர்.

உள்ளதை உணர்ச்சியுடன் கூறும்பொழுது கூட்டலும், குறைத்தலும், திரியும் நேர்தல் இயல்பு. அறிவு எதனையும் அளந்து