பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பாவேந்தரோடு நான் சிலநினைவுகள் நெடுஞ்செழியன், மு.கருணாநிதி முதலியவர்கள் பங்கு கொண்டனர். மாநாடு சிறப்புடன் நடந்தேறியது. அதில் கவிஞர் தலைமையில் சிறந்த கவியரங்கம் ஒன்றும் நடைபெற்றது. அப்போது நான் புதுவை கல்வே கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். கவிஞர் அவர்கள் அக்கவியரங்கில் என்னைக் கலந்து கொள்ளும்படி பணித்தார்கள். நான் சிறிது தயங்கினேன். அதற்குக் காரணம், நான் முன் குறிப்பிட்ட பேரறிஞர் பலர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாயிற்றே; கவிதை எழுதும் துறையில் தொடக்க நிலையில் இருக்கின்றோமே என்ற தாழ்வு மனப்பான்மையால் ஏற்பட்ட அச்சங்களே ஆகும். என்றாலும், கவியரசர் சொல்லைத் தலைமேல் ஏற்றுத் துணிந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உடன்பட்டேன். கவியரசரே என்னைத் தம்முடன் கோவைக்கு அழைத்துச் சென்றார். நான் கவியரங்கில் கலந்து கொண்டேன். அரங்கின் நடுவர்களாகக் கவியரசர், நெடுஞ்செழியன், அப்பாதுரை மூவரும் இருந்தனர். வெள்ளிக் கோப்பை ஒன்று பெற்று வந்தேன். கவிஞருடன் திரும்பிவரும் போது, கவிஞர் நடுவர்களாக இருந்தவர்கள் குறித்திருந்த மதிப்பெண் தாளை எடுத்துக் காட்டினார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! கவிஞரைத் தவிர மற்ற இருவரும் என் கவிதைக்கே அதிக மதிப்பெண் தந்திருந்தனர். கவியரசர் ஒருவர் மட்டுமே எனக்குச் சிறிது குறைவாக மதிப்பெண் தந்திருந்தார். அதையே நான் திரும்பத் திரும்ப உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். என் எண்ணத்தைக் குறிப்பாலுணர்ந்த கவிஞர், "நீ தான் முதற்பரிசு பெற வேண்டியவன். நான் உன்னை அழைத்து வந்திருக்கிறேன். உனக்கு முதற்பரிசு கொடுத்தால், எனக்கு வேண்டியவனுக்கு முதல் பரிசு கொடுத்து விட்டார்கள் என்ற பேச்சு எழக்கூடும். அதனால், நானேதான் மற்றொருவருக்கு முதற்பரிசு கொடுக்கச் செய்து, உனக்கு இரண்டாம் பரிசு கிடைக்கச் செய்தேன்” என்று விளக்கமளித்தார். இவ்வாறு என்னை முதன்முதல் கவியரங்கில் பங்கு கொள்ளச் செய்து, எனக்கு வழிகாட்டியவர் கவியரசரேயாவார். கவியரசர் அவர்கள் திருக்குறளுக்குப் பதின்மர் முன் எழுதிய உரையுடன் ஒப்பிட்டு எதிர்க்கும் புதிய உரையைப் பொதுமக்களிடம் பரவவிட்டார். அதன் பயனாக மதுரையில் பொது மக்களால் அழைக்கப்பட்டு மதுரை உடுப்பி உணவு விடுதியில் இருந்து கொண்டே திருக்குறளுக்குப் புத்துரை எழுதி வந்தார். கவியரசர் அவர்கள் திருக்குறளுக்குப் புத்துரை பெரும்பாலும் எழுதி முடித்து விட்டார். அதனை வெளிக்கொணர்வது அரசியலாருடை யவும், பொதுமக்களுடையவும் கடமையாகும்.