பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 145 மதுரை அன்பர்கள் தனுஷ்கோடி ராசு, பாரதி புத்தக நிலையம் சாமிநாதன், வை.சு. மஞ்சுளாபாய் அம்மையார், கு. திரவியம், பொன்னம்பலனார் முதலியவர்கள் கவிஞரின் அறுபதாம் ஆண்டு விழாவைச் சீரும் சிறப்புமாக நடத்த வேண்டுமென எண்ணினர்; முயன்றனர். அதற்குப் பெரிதும் ஊக்கமூட்டியவர் தற்போது மேலுர் அரசினர் கலைக்கல்லூரி முதல்வராயுள்ள திரு. பண்டித. இராம மீனாட்சி சுந்தரம் பிள்ளை எம்.ஏ. ஆவார். 1951ஆம் ஆண்டு இளைஞர்களால் தொடங்கப்பெற்ற இம்முயற்சி மதுரையில் ஈடேறாத நிலையில் இருந்தபோது, எதார்த்தம் பொன்னுசாமி, ஏ.கே.வேலன் மற்றும் திருச்சி நண்பர்கள் பலர் முயன்று, திருச்சி தேவர் மன்றத்தில் கவிஞரின் அறுபதாம் ஆண்டு விழாவினைச் சீரும் சிறப்புமாக நடத்த முன்வந்தனர். அதுவும் பல காரணங்களால் தடைப்பட்டு விட்டது. மீண்டும் அதைத் திருவானைக்காவலில் உள்ள சத்திரம் ஒன்றில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. காதல் ஆசிரியர் அரு.ராமநாதன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலையிட்டு அவ்விழாவை அங்குச் சிறப்புடன் நடத்தி முடித்தனர். திருவானைக்காவலில் பொன்னி இதழின் உரிமையாளர் அரு.பெரியண்ணனும், இந்நாள் புதுவைச் சட்டமன்ற உறுப்பினர் முத்தியாலுப் பேட்டை முருகையனும், நானும் கவியரசர் குடும்பத்துடன் இருந்து வந்தோம். கவியரசரோடு கருத்து வேறு பட்டுப் பகைத்திருந்த காலஞ்சென்ற துரைசாமிப் பண்டிதரின் இல்வாழ்க்கைத் துணைவியாரும் அப்போது எங்களுடன் இருந்து வந்தார்கள். அங்கே தான் கவியரசர் ஒரு வழிகாட்டியாவார் என்பதை நான் கண்ணாராக் கண்டு மகிழ்ந்தேன். பகைவர் மனைவி என்று சிறிதும் எண்ணாமல் பண்போடும் பாசத்தோடும் கவியரசர் குடும்பமே அந்த அம்மையாரை ஏற்று உபசரித்து வந்தது. அப்போது புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி இதழ் கவியரசரின் அறுபதாம் ஆண்டுவிழா மலர் ஒன்றை வெளியிட்டது. கவிபாரதியாரோ தம்பரம்பரை என்று பாரதிதாசன் ஒருவரையே உருவாக்கினார். பாவேந்தர் பாரதிதாசரோ பாரதிதாசன் பரம்பரை என ஒருபெரும் கூட்டத்தையே உருவாக்கிக் காட்டினார். அப்பரம்பரையைப் புகைப்படத்தோடு வெளியிட்டு அறிமுகப் படுத்திய சிறப்பு அந்தப் பொன்னி இதழையே சாரும். கவியரசர் தம் மாணவர்கட்கும் பரம்பரைக்கும் மட்டும் வழிகாட்டி அல்லர்; மனித இனத்திற்கே வழிகாட்டி ஆவார்.