பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 என்தந்தையார் அவர் கூட்டத்துக்குப் போகிறேன் என்று சொன்னால் என் தாயாருக்குக் குலைநடுங்கும்; தப்புத்திப்பென்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து தமது வெறுப்பை வெளிப்படுத்துவார். தம்மிடம் எங்குப் பணம் கேட்டு விடுவாரோ என்று என்தாயாருக்கு அச்சம். இதைக் குறிப்பால் அறிந்து கொண்டு என்னை அருகில் அழைப்பார் என் தந்தையார். ஏம்மா! சீப்பை எடுத்து ஒளிச்சு வைச்சுட்டா கல்யாணம் நின்னுடும்னு உங்கம்மா நினைக்கறா!' என்று கூறுவார். நான் கையை நீட்டுவேன். வளையலைக் கழற்றி விற்று எடுத்துக் கொண்டு கூட்டத்துக்குப் போய் விடுவார். 1930ஆம் ஆண்டில் நான் பத்து வயதுப் பெண். அப்போது என்தந்தையார் ஒரு தீவிர தேசியவாதி. காங்கிரஸ் மீதும் கதர்மீதும் அவருக்கு அளவு கடந்த பற்று. கதர்த்துணியைத் தோளில் சுமந்து கொண்டு தெருத் தெருவாகச் சென்று விற்று வருவார். வீட்டில் நாங்கள் எல்லாரும் அணிவது கதராடைதான். என் தாயார் அப்போது கழுத்தில் அணிந்திருந்த பத்துபவுன் நகையை விற்று அந்தப் பணத்தில் தாம் எழுதிய கதர் இராட்டினப் பாட்டு' நூலை வெளியிட்டார். நாங்களே அந்நூலைத் தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பினோம். கைச் செலவுக்குப் பணமில்லாத நேரத்தில் அவருக்குக் காரணமில்லாமல் கோபம் வரும். ஒருமுறை என் தாயார் ஒராண்டுக்குத் தேவையான புளியை வாங்கி இரண்டு பானைகளில் நிரப்பி வைத்திருந்தார். அவற்றைப் பார்த்ததும் வந்ததே கோபம்! புளி! அங்கே பெரிய பானைப்புளி! அப்படிச் சின்னப்பானைப் புளி! எதுக்கு? பத்து வருஷத்துக்குப் புளியா. பால அடிப்ப! என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டார். வாத்தியார் சுப்புரத்தனம் என்றால் எல்லாருக்கும் கொஞ்சம் நடுக்கந்தான். எப்போதும் அவர் கையில் ஒரு கூட்டம் இருக்கும். வீட்டில் கத்தி, அரிவாள், தடி எல்லாம் அடுக்கி வைக்கப்பட் டிருக்கும். எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் ஒய்வு வேண்டி என் தந்தையார் அரசாங்க மருத்துவமனைக்குச் சென்று படுத்துக் கொள்வதும் உண்டு. பள்ளியிலிருந்து மருத்துவ விடுப்பு எடுப்பதற்காக அரசாங்க மருத்துவரிடம் சென்று மருத்துவச் சான்றிதழ் (Medical Certificate) கேட்பார். அவர் கொடுக்க மறுத்தால் பத்திரிகையில் எழுதி உன் குட்டை அம்பலப்படுத்துவேன்' என்று மிரட்டி விட்டு வந்து விடுவார். அன்று மாலை மருத்துவரே வீடு தேடிவந்து மருத்துவச் சான்றிதழை வழங்கிச் சமாதானப்படுத்திவிட்டுப் போவார்.