பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 237 முடித்துவிட்டேன் என்றார் அவர். பின்னர் குயில் இதழில் வள்ளுவர் உள்ளம் என்னும் பெயரில் அவ்வுரை விட்டுவிட்டு வந்து கொண்டிருந்தது. அவர் எல்லா குறட்பாக்களுக்கும் முழுவதும் உரை எழுதியிருந்தாரோ என்பது எனக்கு ஐயமாக இருந்தது. அவ்வுரை சில குறள்களுக்கு மட்டும் குயில் இதழில் வந்தது. பாரதிதாசனார் சில குறள் அதிகாரங்களுக்கு மட்டுமே முழுமையாகவும் முறையாகவும் உரை எழுதியுள்ளார் எனவும் பிற அதிகாரங்களுக்குத் திருக்குறள் நூலின் ஒரங்களில் எழுதப்பட்ட குறிப்புக்கள் மட்டுமே உள்ளன எனவும் அண்மையில் அறிந்தேன். இன்னும் அவ்வுரை வெளிவரக் காணேன். ஏமாற்றமே எனக்கு ஏற்பட்டது. பாரதிதாசனார் திருக்குறளுக்கு எழுதிய புத்துரை பகுத்தறிவு நோக்கிலும் தனித் தமிழர் நோக்கிலும் எழுதப்பட்டது. திருவள்ளுவர் திருக்குறளைச் சாங்கிய நூல் அடிப்படையில் எழுதியுள்ளார் எனக் கவிஞர் அடிக்கடி கூறுவதுண்டு. பகுத்தறிவு வாழ்வு மேற்கொண்டு தமிழாசிரியராகத் தொழில் புரிய இருந்த எனக்குப் பாரதிதாசனார் புத்துரையைப் பரப்புவது பணியாக இருக்க வேண்டும் என்று அன்று எண்ணிக் கொண்டேன். ஆனால் அவ்வாய்ப்பு இன்னும் எனக்கு வாய்க்காதது. ஏமாற்றமாக உள்ளது. என் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டுச் சேலம் கல்லூரியில் 1956இல் தமிழ் விரிவுரையாளன் ஆனேன். ஐந்தாண்டுகள் ஓடின. 1961இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர் மு.வ. மேற்பார்வையில் நான் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்தேன். அவ்வாழ்க்கை மூன்றாண்டுகள். அப்போது பாரதிதாசனார் சென்னையில் நிலையாகத் தங்கித் தன் காவியமாகிய பாண்டியன் பரிசைப் பேசும் படமாக்கத் தொழிலகம் ஒன்றை அமைத்து முயற்சி மேற் கொண்டிருந்தார். என் அண்ணா முருகுசுந்தரத்துக்குப் பாரதிதாசனார் நன்கு அறிமுகம் ஆகியிருந்தார். அவர் வழியாக மருத்துவக்கல்லூரியில் பயின்று கொண்டிருந்த என் தம்பிக்கும் அவர் அறிமுகம் ஆனார். கவிஞரின்தித்திப்பு நீர் நோய்க்கு அவ்வப்போது என் தம்பியின் உதவி வேண்டியிருந்தது. இந்நிலையில் கவிஞருடன் மீண்டும் உறவு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 1963இல் தியாகராய நகரில் கவிஞர் இல்லத்துக்குச் சென்றேன். அப்போது அவர் பங்களாவில் பின்கட்டில் குடியிருந்தார். பங்களா என்னும் வளமனையில் இருந்துவிட்டுக் கட்டுப்படியாகாத காரணத்தால் பின் கட்டுக்குக் கவிஞர் குடி வந்துவிட்டார் என்றறிந்தேன். மட்டமான குடிலும் இல்லை. வளமான குடிலும் இல்லை. பின் கட்டு வாழ்க்கை எனக்கு வருத்தம் தரவில்லை.