பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 இழந்த செல்வம் வளமனையில் இருந்து விட்டுக் கட்டாது பின் கட்டுக்கு வந்துவிட்டார் என்ற செய்திதான் என் நெஞ்சை உறுத்தியது. அவர் எண்ணி வந்தது கைகூடவில்லை; திட்டமிட்டது நடக்கவில்லை; ஆசை நிறைவேறவில்லை. ஏமாற்றம் அடைந்தார்; தவறு செய்துவிட்டார்; பட்டணம் வந்து கெட்டார்? என்ற கருத்துக்கள் என் உள்ளத்தில் ஒன்று ஒன்றாக வந்தன. இவையே உள்ளத்தை வருத்தின. இவையெல்லாம் உண்மையே. பேசும் படத்துறையில் இவை வழக்கம். அங்கு ஆறிடுமேடு மடுவும் போலாம் செல்வம். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் கவிஞர் இதில் இறங்கியதே கவலை தந்தது. நெடுந்தேர், கடல் ஓடியது போன் றிருந்தது; நாவாய் நிலத்தோடியது போன்றிருந்தது. கவிஞர்க்குக் காவியம் உரியது. ஆனால் அதைப் படமாக்குதல் உரியதல்ல. கவிஞர் கலைஞர்; அரசியல்வாதி; வாழ்வின் இறுதிப்படியில் நின்று கொண்டிருப்பவர். இவருக்கு ஏன் இந்தப் படத் தொழில் பைத்தியம்? என்ற கேள்வியே என் உள்ளத்தில் எழுந்தது. அவர் முயற்சி தோல்வியில் முடிந்ததில் வியப்பில்லை! கவிஞர் சிவாஜியையும் மற்றுஞ்சிலரையும் எதிர்பார்த்துச் சென்னை வந்திருந்தார். சிவாசி புகழைக் குயில் கூவிக் கொண்டே இருந்தது. கத்தும் குயிலோசை காதில் பட்டால் மட்டும் போதுமா? கரையும் உள்ளம் வேண்டாமா? கவிஞர் இல்லத்தில் தமிழ் இலக்கியச் சூழ்நிலையைக் கண்டேன். படத்தொழில் சூழ்நிலை ஒன்றையும் நான் காணவில்லை. பாரதிதாசனார் தமிழகம் போற்றும் மாபெருங்கவிஞர். ஒர் அரசியல் தலைவர். தமிழ்த்தாயின் தவப்புதல்வர். ஆனால் அவர் இல்லத்தில் அவற்றுக்குரிய ஆரவாரத்தை நான் காணவில்லை. ஏமாற்றத்தின் இடையிலேயும் கவிஞருக்குக் கவலை உள்ளம் இருந்ததாக வெளித்தெரியவில்லை. ஒருகால் அது உள்ளூர இருந்திருக்கலாம். வேறொரு நண்பரும் அப்போது வெளியூரிலிருந்து வந்திருந்தார். கவிஞர் உணவருந்தும்படி வற்புறுத்தினார். வழக்கம்போல் அன்று மீன்குழம்பு. இல்லத்தரசியார் பழனியம்மாள் அப்போது அங்கிருந்தார்கள். இலக்கியப் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மனைவி நடமாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுட்டிக்காட்டிக் கவிஞர், இவளைப் பார்த்தால் எப்படிக் கவிதை வரும்? என்று ஒரு போடு போட்டுவிட்டார்! கவிஞர் வேடிக்கையே பேசினார். நாங்களும் புன்னகை செய்து கொண்டோம். கவிஞர் இல்லறத்தைச் சுவை குன்றாமலே நடத்திக் கொண்டு வந்திருந்ததாக உணர்ந்தேன்.