பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 இழந்தசெல்வம் விழா முயற்சி ஆதரவிழந்ததை நான் அறியேன். நான் அதுவரை ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் நான் ஈடுபட்ட முயற்சியே தோல்வி கண்டது எனக் கவிஞர் தவறாக எண்ணியிருக்க வேண்டும். உண்மையில் நாரணதுரைக்கண்ணரும் பிறரும் மேற்கொண்ட முயற்சியே தோல்வியில் முடிந்திருக்க வேண்டும். இது பற்றிக் கவிஞரைச் சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும் என்று எண்ணிய என் எண்ணம் கைகூடாதவாறு கவிஞர் விரைவில் இவ்வுலகையே நீத்துச் சென்றுவிட்ட்ார். 12.4.1964 அன்று பாவேந்தரை அவர் இல்லத்தில் கண்டு பேசினேன். பாவேந்தருக்கு உடல் நலமில்லாதது போக, சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை 21.4.64 காலை கேள்விப்பட்டேன். உடனே மருத்துவமனைக்குச் சென்றேன். இரயிலில் மூன்றாம் வகுப்புப் பயணியைப் போலப் பொதுப்பிரிவில் (General ward) அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். உறக்கமோ மயக்கமோ தெரியவில்லை. அவர் உணர்வின்றிப் படுத்திருந்தார். அண்மையில் சிலர்-ஒருசிலரே-கவலையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர் நெருங்கிய உறவினர் போலும். பாமன்னரின் மகன் மன்னர் மன்னன் நின்று கொண்டிருந்தார். வேறு யாருமில்லை. மன்னர் மன்னன் எனக்கு அறிமுகம் இல்லை. சிறிது நேரம் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டேன். விடுதிக்குத் திரும்பிவந்த சிறிது நேரத்தில், பாவேந்தர் பாவுலகையும் பாருலகையும் நீத்துச் சென்று விட்டார் என்ற செய்தி பரவியது. முற்பகல் அச்செய்தி என் காதில் விழுந்தவுடன் தியாகராய நகரில் அவர் இல்லத்துக்கு விரைந்தோடினேன். அவர் இல்லம் 'வெறிச்சோடி இருந்தது. பாவேந்தர் மருத்துவ விடுதியிலிருந்து இல்லத்துக்குக் கொண்டுவரப் பட்டவுடன் புதுவைக்குக் கொண்டு போகப்பட்டார்; பிறந்த மண்ணிலேயே மறைந்து போகத் தன் இல்லத்திற்கே சென்றார். செந்தமிழுக்குப் பாப்புனைந்த நா செந்தழலுள் வெந்தது. பாவேந்தரோடு கருத்திலும் எண்ணத்திலும் நான் உறவு கொண்டிருந்த அளவு பழக்கத்திற் கொண்டிருக்கவில்லை. அவர் பாக்கள் இனிமையானதுபோல் அவர் பழக்கமும் எனக்கு இனிமை தந்தது. கல்வியைப் பற்றி வற்புறுத்தி வற்புறுத்தி அவர் பாடினார். 'படித்த குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்’ என்பது அவர் கருத்து. அப்போது எம்.ஏ., எம்.லிட்., எம்.பி.பி.எஸ்., ஆக விளங்கிய உடன் பிறந்த எம் மூவரையும் ரொம்ப படித்த குடும்பம் என்று பாவேந்தர் புகழ்பாடிக் கொண்டிருந்தார். ஆங்கில உயர்கல்வி பெற்ற எங்கள் நிலை அவருக்குப் பெருமை தருவதாகத் தோன்றியது.