பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் கேட்டதும் பெரியார், ஸ்டாலின் போன்ற சில அரசியல் தலைவர்களின் படத்தைப் பார்த்தவுடன் ஒருவித அச்சங்கலந்த மரியாதை நம் உள்ளத்தில் நம்மையறியாமலேயே ஏற்படுவதை உணர்கிறோம். பாவேந்தர் பாரதிதாசனின் உருவப்படத்தை முதன் முதலில் பார்த்தபோதும் அத்தகைய உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் பள்ளி மாணவனாக இடைப்பாடியில் படித்துக் கொண் டிருந்தபோது திராவிடர்க்கழகம் பிரியாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. கி.பி. 1946ஆம் ஆண்டில் திருவாளர்கள் அன்பழகன், நாவலர் இளந்தாடி நெடுஞ்செழியன், டார்பிடோ ஜனார்த்தனம் ஆகிய மூவரும் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு கழகப் பிரசார பீரங்கிகளாகத் தமிழகத்து மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்தனர். நாவலர் நெடுஞ்செழியன் தாம் பேசிய ஒவ்வொரு மேடையிலும் பாவேந்தர் பாடல்களான ‘எங்கள் வாழ்வும்', 'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா, உலகப்பன், வாளினை எடடா!' ஆகியவற்றைப் பாடாமல் கீழே இறங்கமாட்டார். அப்பாடல்களை அன்றைய நெடுஞ்செழியன் பாடிக் கூட்டத்தை முடிக்கும்போது இடியிடித்து மழை ஒய்வது போலிருக்கும். இடைப்பாடிக் கூட்டத்தில் நெடுஞ்செழியன் இப்பாடல்களை உணர்ச்சிவசப்பட்டு மேடையில் கூறக் கேட்ட நான், அன்றே அவ்வூர்த் திராவிடர்க்கழகத் தலைவரும் நண்பருமான காலஞ்சென்ற திரு இரா. தாண்டவனிடத்திலிருந்து பாரதிதாசன் கவிதைகள் என்ற முதல் தொகுதியை வாங்கிவந்து படித்தேன். அன்றிலிருந்து பாரதிதாசன் கவிதைகளுக்கும் எனக்கும் நிலையான தொடர்பு ஏற்பட்டு விட்டது.