பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தேனருவி கவியரசு கண்ணதாசன் பாவேந்தர் என்னும் பாட்டுத் தேனருவி சேலம் சேர்வராயன் மலையடிவாரத்தில் நுங்கும் நுரையுமாகச் சுழித்து ஒடிக் கொண்டிருந்த நேரத்தில், அதன் சுழலில் சிக்காமல் கரையோரமாகக் குளித்துக் கொண்டு அதன் அழகில் உள்ளத்தைப் பறிகொடுத்த வண்ணம் நின்று கொண்டிருந்த துடிப்புள்ள இளைஞர் கவியரசு கண்ணதாசன். அவர் பேச்சு வாக்கில் பாவேந்தரைப் பற்றிச் சிதறிய சில முத்துக்கள் இங்கு சிறிய மாலையாகக் கட்டப்பட்டுள்ளன. இம்மாலையில் உள்ள முத்துக்கள் மூன்றுதான்; என்றாலும் அவை ஆணிமுத்துக்கள். பாவேந்தர் பாரதிதாசன் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் சில படங்களுக்குப் பாட்டும் வசனமும் எழுதிக் கொண்டிருந்த நேரம். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் அலுவலகத்திலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த சண்ட மாருதம்' என்ற பத்திரிகையில் மாதம் முப்பது ரூபாய்ச் சம்பளத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எதிர்காலக் கனவுகள் ஏக்கங்களாக என் கண்களில் தேங்கியிருந்தன. பாவேந்தர் அப்போது புகழேணியின் உச்சியில் இருந்தார். அப்போது அவருடைய சிறிய அசைவுகளும் எனக்கு வரலாறாகப்பட்டன. நினைவில் நின்ற ஒரிரு நிகழ்ச்சிகளைக் கூறுகிறேன். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான வளையாபதியை மாடர்ன் தியேட்டர்ஸார் திரைப்படமாக உருவாக்கிக் கொண்டிருந்தனர். பாவேந்தர் அதற்குப் பாட்டும் வசனமும் எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய பாடல்களுக்கு தட்சணாமூர்த்தி இசையமைத்துக் கொண்டிருந்தார்.