பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 என்அறிவுத்தந்தை உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தது. எனவே மாணிக்கவாசகம் பார்க்க வந்தபோது அவரிடம் பேசவில்லை பாவேந்தர். டி.ஏ.வி. நாதன் இரண்டு மூன்று தடவை நடந்து மலருக்குக் கவிதை வாங்கிச் சென்றார். இரவு கவிதை எழுதிப் போட்டு விட்டுப் பாவேந்தர் தூங்கிவிட்டார். என் மனைவி ரகுபதி அதைப் பெயர்த்து எழுதி வைத்தாள். ஒருமுறை சைக்கிள் ரிக்ஷாவில் வீட்டுக்கு வந்தார் பாவேந்தர். நியாயமாக அவனுக்கு எட்டனா கொடுத்தால் போதும்: ரூ.2% கொடுக்கச் சொன்னார். எதற்கு அவ்வளவு தொகை என்று கேட்டேன். எவ்வளவு தூரம் தெரியுமா? மேலமாசி வீதியெல்லாம் சுத்திக்கிட்டு வந்தா...ம்... கொடுப்பா என்றார். பேசாமல் கொடுத்தேன். மறுபடி ஒருமுறை அதே இடத்திலிருந்து வரும்போது ரிக்ஷாக்காரனுக்கு 6 அணா தான் கொடுத்தோம். பாவேந்தர் உலகியலைப் பொறுத்தவரையில் குழந்தை. ஒருமுறை முருகுசெழியன் என்ற நண்பர் பாவேந்தரை விருந்துக்கு அழைத்திருந்தார். போகும்போது நானும் அவரும் பேசிக் கொண்டே நடந்து போனோம். வரும்போது பாதிவழியிலேயே நின்று விட்டார். "இனி வண்டி நகராது, வண்டி கூப்பிடு!" என்றார். கூப்பிட்டேன். மதுரை வந்தால் திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்வேன். பாதியிலேயே எழுந்து வந்துவிடுவார். பாவேந்தரின் மகன் கோபதி (மன்னர் மன்னன்)யின்திருமணம். நான் குடும்பத்தோடு திருமணத்துக்குப் புதுவை சென்றேன். எனக்கு வேட்டி சட்டையும், என் மனைவிக்கு வெல்வெட் பையும் கொடுத்தார். நான் திருமணத்துக்குப் பட்டிவீரன்பட்டி மலைப்பழம் வாங்கிச் சென்றேன். சேலம் நண்பர் ஒருவர் குண்டுமாம்பழம் வாங்கி வந்தார். பண்ருட்டி நண்பர் ஒருவர் பலாப்பழம் வாங்கி வந்தார். காலையில் சுவையான சர்க்கரைப் பொங்கலும் பழமும் சிற்றுண்டியோடு வழங்கப்பட்டது. காலை 10 மணிக்குப் பந்தலில் அமர்ந்திருந்த நண்பர்களுக்குப் பாதாம்கீர் வழங்கப்பட்டது. பாவேந்தர் சமையற்காரனைக் கூப்பிட்டு எல்லோருக்கும் முட்டை ஆம்லெட் போட்டுக் கொடு... இல்லை அவிச்சுக்கொடு' என்று கட்டளையிட்டார். திருமண வீட்டில் முட்டை ஆம்லெட்டா' சமையல்காரன் திருதிருவென்று விழித்தான். செய்தி பெண்கள் கூட்டத்துக்கு எட்டியது. மூத்த மகன் சரசுவதி ஓடி வந்தாள். என்னப்பா திருமண வீட்ல இப்ப யாராவது முட்டை சாப்பிடு வாங்களா? என்று கேட்டாள். ஏ. சாப்பிட்டா என்ன? எனக்கு வேணும்! சாஸ்திரமா பேசற சாஸ்திரம்..” என்று சத்தமிட்டார்.