பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 1961ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நான் மூன்றாம் முறையாகப் பார்த்தேன். அன்று சென்னை இராஜாஜி ஹாலில் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் பெருமன்றத் துவக்க விழா நடைபெற்றது. அவ்விழாப் பொறுப்பாளரான திருச்சி அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் நேரில் சென்று அழைத்த அழைப்பை மதித்துப் பாவேந்தர் விழாவுக்குச் சற்று முன்னதாகவே வருகை தந்திருந்தார். சேலம் மாவட்டத் தமிழ் எழுத்தாளர் மன்றச் செயலாளன் என்ற முறையில் நானும் விழாவில் கலந்து கொண்டேன். பாவேந்தர் பெண்கள் கூட்டத்திடையே அமர்ந்திருந்தார், பாரதியாரின் மூத்த மகளான தங்கம்மாள் பாரதி அங்கு வந்திருந்ததால், பாவேந்தர் அந்த அம்மையார் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பெருந்தலைவர் காமராசர், டாக்டர் சுப்பராயன், மீ.ப. சோமசுந்தரம் ஆகியோரும் அன்றைய விழாவில் கலந்து கொண்டனர். காமராசர் மேடைக்கு வந்ததும் பாவேந்தரைப் பார்த்தார். உடனே விழாப் பொறுப்பாளரை அனுப்பிப் பாவேந்தரை அழைத்து மேடைமீது தம்மருகில் உட்கார வைத்துக் கொண்டார். காமராசர் மன்றத்தைத் துவக்கி வைத்தார். பாவேந்தர் வாழ்த்தும் முகத்தான் சில சொற்கள் நறுக்குத் தெறித்தாற்போல் சொன்னார்: "தமிழ் எழுத்தாளன் முதலில் தமிழை ஒழுங்காகக் கற்க வேண்டும். இன்றைய தமிழ் எழுத்தாளர் பலருக்குத் தமிழே தெரியாது. எழுத்தாளன் என்பவன் எப்போதும் எவருக்கும் அஞ்சாமல் தன் உள்ளத்தில் தோன்றும் கருத்தை வெளியிடும் துணிச்சல் பெற்றவனாக இருக்க வேண்டும்” என்று இந்த இரண்டு கருத்தை மட்டும் சொல்லி விட்டு உட்கார்ந்து கொண்டார். இரண்டு அல்லது மூன்று நிமிடமே பேசியிருப்பார். அதற்குள் இந்த நாட்டு எழுத்தாளனுக்குக் கட்டாயம் எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்லிவிட்டு முடித்துக் கொண்டார். இதுவரை பாவேந்தரைப் பார்த்ததோடு சரி. அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து பாவேந்தருக்கும் எனக்கும் உள்ளங்கலந்த பழக்கமும், நெருக்கமும், அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பும்’ கடிதத் தொடர்புகளும் ஏற்பட்டன. இந்நெருங்கிய தொடர்பு அவர் இறக்கும்வரை இருந்து கொண்டிருந்தது. கி.பி. 1962இல் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பி.டி. படிப்பதற்காக வந்து சேர்ந்தேன். பாவேந்தர் அருகிலேயே குடியிருந்தார். பெரும்பாலும் கல்லூரி விட்ட நேரங்களில் பாவேந்தரோடு தான் இருப்பேன். அவரோடு பழகும் நேரங்களில் அவர் வாழ்க்கை