பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 செட்டிநாட்டிலிருந்துசென்னைவரை. பாரதிக்கு வடமொழி, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய பிறமொழிகளில் தேர்ச்சி உண்டு. பாரதிதாசன் தனித்தமிழ்க் கவிஞர். பிரெஞ்சு ஆட்சியில் இருந்த புதுச்சேரியில் பிறந்து வாழ்ந்தாலும் அவருக்குப் பிரெஞ்சு இலக்கியப் பாதிப்பு கிடையாது. தான் சரியென்று நினைத்ததை எவருக்கும் அஞ்சாமல் பின் விளைவுகளுக்குச் சிறிதும் கவலைப்படாமல் எவன் எழுதுகிறானோ அவன் தான் உண்மைக் கவிஞன். பாரதிதாசனிடம் இப்பண்பு முனைப்பாகவே இருந்தது. வரலாறு சில கவிஞர்களைப் படைத்ததுண்டு; இவர் வரலாற்றைப் படைத்த கவிஞர். ஆங்கில இலக்கிய உலகில் தமக்கென்று ஒரு கால கட்டத்தை (Age) உருவாக்கியவர் ஷேக்ஸ்பியர். தமிழில் தமக்கென்று தனிக் காலகட்டத்தை உருவாக்கிய பெருமை பாரதிதாசனுக்கு உண்டு. இவருக்கென்று தனிப்பட்ட இலக்கிய வரலாறு, தமிழ் உள்ளளவும் இருக்கும். பாரதியை உலகமெங்கும் விளம்பரப்படுத்தவும், அவர் இலக்கியங்களைப் பரப்பவும் ஆற்றல் வாய்ந்த ஒரு பின்னணி இருக்கிறது. பாவேந்தருக்கு அது இல்லை. அப்படி இருந்திருந்தால், இவர் வாழ்ந்த காலத்திலேயே நோபில் பரிசு பெற்றிருப்பார்.