பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 பாட்டுக்குழந்தை பாரதிதாசன் என்னுடைய கைவிரல் கார்க் கதவின் இடையில் இருப்பதைக் கவனிக்காமல், கவிஞர் கதவைச் சாத்திட்டார். என் கைவிரல் கதவிடுக்கில் சிக்கிக் கொண்டது. விரல் நசுங்கி இரத்தம் கொட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும் கவிஞரின் உள்ளம் பதறியது. 'பையனை நாங்கள் மருத்துவமனைக்குக் கூட்டிப் போகிறோம். நீங்கள் நீதிமன்றம் சென்று விட்டுக் குயில் அலுவல்கம் செல்லுங்கள் என்று உடன் இருந்தவர்கள் கூறினார்கள். கவிஞர், அவர்கள் கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை. தாமே என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். காயத்துக்குத் தையல் போட்டு மருந்திட்டுக் கட்டி என்னை வீட்டில் கொண்டுவந்து விட்டபிறகே அவர் நீதிமன்றம் சென்றார். காயம் ஆறி நீண்ட நாள் ஆனபிறகும் கூட என்னை எப்போது பார்த்தாலும் அடிப்பட்ட கை விரலைக்காட்டச் சொல்லிப் பார்ப்பார். அவர் பரிவும், அன்பும் என்னை மெய்சிலிர்க்கச் செய்யும். எங்கள் தந்தையார் இறந்தபோது, கவிஞர் புதுச்சேரியில் இல்லை. திரைப்படத்துக்குப் பாடல் எழுதுவதற்காகச் சென்னை சென்றிருந் தார். எங்கள் தந்தையின் இறப்புச் செய்தியைப் பாரிநிலையம் உரிமையாளரான திருவாளர் செல்லப்பன் அவர்களுக்குத் தந்தி மூலம் தெரியப்படுத்தினோம். அவர் கண்ணதாசனுக்குத் தெரிவித்தார். கவிஞர் கண்ணதாசன், எங்கோ ஒரு ஸ்டுடியோவில் இருந்த பாவேந் தரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சம்பந்தியின் இறப்பைத் தெரிவித்தார். உடனே கண்ணதாசனின் காரை எடுத்துக் கொண்டு கவிஞர் சென்னையிலிருந்து புறப்பட்டு விட்டார். நாங்கள் கொடுத்த கம்பிச் செய்தி பாவேந்தருக்குச் சென்னையில் கிடைத்திருக்காது என்று நாங்கள் நினைத்தோம். எனவே எங்கள் தந்தையாரின் சடலத்துக்கு எரியூட்டுவதற்காகச் சுடுகாட்டுக்குப் புறப்பட்டோம். சடலத்தைத் சிதையில் வைத்து எங்களுடைய மூத்த அண்ணார் தீ வைக்கத் தொடங்கும்போது யாரும் எதிர்பாராத வண்ணம் பாவேந்தர் அங்குக் காரில் வந்து இறங்கினார். மேலே அடுக்கப்பட்டிருந்த எரு முட்டைகளை நீக்கச் சொல்லிச் சம்பந்தியாரின் முகத்தைக் கடைசி முறையாகப் பார்த்தார். அவர் கண்களில் நீரூற்றுப் பெருகி ஓடியது. என்றும் நிலை குலையாத பாவேந்தர் அன்று நிலை குலைந்து குழந்தை போல் அழுததைக் கண்டு எல்லோரும் வியந்தோம். தந்தையைப் பிரிந்து சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியிருந்த எங்களுக்கு ஆறுதல் கூறினார் பாவேந்தர். வீட்டிற்குத் திரும்பியதும் என் அண்ணார் தண்டபாணியை அழைத்து நான் வரும்வரையில் சடலத்தை வீட்டில் வைக்கவில்லையே! என்று கூறி வருத்தப்பட்டார்.