பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 429 மரியாதை தம்முடன் வந்தவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் அவர் கண்ணுங்கருத்துமாக இருப்பார். அவரோடு ஒருமுறை ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். திருமண வீட்டில் உள்ளவர்களிடம் என்னைப் பற்றிப் பெருமையாகக் கூறி அறிமுகப்படுத்தினார். இதோ... இவரு என்னோட வந்தவரு... படிச்சவரு. பெரிய இடத்துப் பிள்ளை... எல்லாம் அவருதான் என்று திருமண வீட்டாரிடம் கூறியது என் உள்ளத்தை உருகச் செய்தது. கவிஞருக்குக் கிடைத்த ராஜமரியாதை' எனக்கும் கிடைத்தது. கவிஞரின் பரந்த உள்ளத்தை எண்ணி எண்ணி நான் பெருமிதமடைந்தேன். புதுவையில் ஒரு பெரிய கோவில் உள்ளது. அந்தக் கோவிலின் முன் மண்டபத்தில் திருக்குறள் மெல்லிசை நிகழ்ச்சியொன்றை ஓர் அடிகளார் ஒருநாள் நடத்தினார். பாவேந்தர் அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியிருந்தார். ஒரிரண்டு திருக்குறள் பாக்களை அப்போது வெளிவந்திருந்த புதிய திரைப்பட மெட்டில் பாடிக் காண்பித்தார் அடிகளார். இசைக்கும் மெட்டுக்கும் முதலிடம் தந்து பாடியதால் குறட்பாக்களின் கருத்துத் தெளிவு சிதைவுற்றது. தலைமை தாங்கியிருந்த கவிஞருக்குச் சினம் பொங்கியது. "இந்தப்பா நிறுத்து! நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்கற... உட்கார்!" என்று கோபத்துடன் சொல்லிவிட்டு தாம் எழுந்து பேசத் தொடங்கினார். “எந்த ஒரு பாட்டையும் பொருள் விளங்கப் பாட வேண்டும்; புரியும்படி பாட வேண்டும். அதேபோலப் பாட்டுக்களும் பொருளோடும், சிறந்த கருத்துக்களோடும் அமைந்திருக்க வேண்டும். திரைப்படத்தில் இப்போது வருபவை பாட்டுக்களா? லொள், லொள், லொள். இப்படியொரு பாட்டு; என்ன என்ன என்ன.. இப்படியொரு பாட்டு; இதனால் தமிழ் எப்படி வளரும்? வாழும்? மக்களுக்குத் தமிழ் அறிவு எப்படிப் பெருகும்? சிந்திக்க வேண்டாமா?” என்று ஒரு போடு போட்டார். அடிகளார் உடனே புறப்பட்டுவிட்டார்.