பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ வளைந்து வளைந்து செல்லும் ஒற்றையடிப்பாதை என்று அவன் கவிதையைப் பற்றித் திறனாய்வாளர் கூறுவர். அக்காட்டுக்குள் நுழைந்து கனிகளைப் பறித்துவரும் வாய்ப்பை எனக்கு நல்கிய திருச்சி வானொலி நிலையத்தாருக்கு என் நன்றியைக் கூறாமல் இருக்க முடியாது. நானறிந்த ஒரு பேராசிரியர் வெளியில் செல்லும்போது, தம் மனைவியை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டுச் செல்வார். இக்கொடுமையைப் பற்றி இலக்கிய ஆர்வம் மிக்க ஒரு மருத்துவ நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர் கீழ்க் கண்டவாறு விளக்கம் தந்தார்: - “இது ஒரு வகை மனநோய். மருத்துவ நூலார் இதை மனமயக்கம் (Delution) என்பர். உண்மையல்லாத ஒன்றை உண்மையென நம்பி உள்ளத்தைக் குழப்பிக் கொண்டு, உள்ளம் செலுத்தும் தவறான வழியிலேயே செல்வது இந்நோயின் தன்மை. ஒதெல்லோ இவ்வகை நோயாளிக்குச் சரியான எடுத்துக்காட்டு. கற்புள்ள தன் மனைவியைக் கற்புக் கெட்டவளாக எண்ணித் தாறுமாறாக நடந்து கொள்வது. இந்நோய்க் கூறுகளில் ஒன்று.” ஒதெல்லோ ஒருமனநோயாளி என்ற கட்டுரைக்கு இதுவே வித்து. பாரதிதாசனிலிருந்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக நான் பழகிய கவிஞர்கள் பலர். ஒவ்வொரு கவிஞரும், ஒவ்வொரு வகையில் என்னைப் பாதித்துள்ளனர். அவர்களோடு பழகிய காலத்தில் என் உள்ளத்தில் பதிந்த பசுமையான நினைவுகளைச் சில கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறேன். 'பெரியார்’ என்று சொன்னால் தமிழகத்தில் ஈ.வெ.ரா.வையே குறிக்கும். அதுபோல் கேரளத்தில் குரு என்று சொன்னால் நாராயண குருவையே குறிக்கும். வடலூர் வள்ளலாரைப் பற்றிச் சிந்திக்கும் போதெல்லாம் நாராயண குரு நெஞ்சில் வந்து நிற்பார். இருவருக்கும் நிறைந்த ஒற்றுமை. அதன் விளக்கமே புரட்சித் துறவிகள்.