பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சுந்தரம் 一囚 என்று சொல்லி, அவரை நாராயண குருவிடம் ஆற்றுப் படுத்தினார். டாக்டர் பத்பநாபனின் மகன்தான் இரண்டாவது குருவான நடராச குரு. இவர் பெங்களுரில் இளங்கலைப் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சைதாப் பேட்டைக் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சியும் பெற்று, சிவகிரியில் நாராயண குரு நிறுவியிருந்த பள்ளிக்குத் தலைமையாசிரியராகித் தம் தொண்டைத் தொடங்கினார். நாராயண குரு இவரைப் பாரிசில் உள்ள சார்போன் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி, அங்கிருந்த ஹென்றி பெர்க்சன் (Henry Bergson) என்ற தத்துவ மேதையிடம் கல்வி பயின்றுவரத் தம் சொந்தச் செலவில் அனுப்பி வைத்தார். இளங்கவிஞராக இருந்த குமாரன் ஆசானையும் குரு தம் சீடராக ஏற்றுக்கொண்டு, அவரைப் பெங்களுருக்கு அனுப்பி ஒரு பெரிய சாஸ்திரியிடம் சமஸ்கிருதம் பயின்று வர ஏற்பாடு செய்தார். இராஜாராம் மோகன்ராய்க்குப் பின் வங்கத்தில் ஒரு பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்தது. குரு ஆசானை வங்காளத்துக்கு அனுப்பி வங்கமொழியையும் வங்கக் கலை இலக்கியங்களையும் தெளிவாகக் கற்று அறிந்துவரப் பணித்தார். தாகூருடன் ஆசானுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. மலையாளம், சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் புலமை பெற்றிருந்த கவிஞர் குமாரன் ஆசானின் படைப்புகள் கேரளத்தில் பெரும் அறிவுப் புரட்சியையும், சமுதாயப் புரட்சியையும் தோற்றுவித்தன.