பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 173 நாராயண குரு தமது இயக்கத்தைப் பரப்ப ஆன்மீகம், கல்வி, சமூகத்தொண்டு ஆகிய பணிகளுக்கென்று தனித்தனியாக அறக்கட்டளைகள் நிறுவினார். நாடெங்கும் கல்விக் கூடங்களோடு கூடிய ஆசிரமங்களைத் தோற்றுவித்தார். இருபது இளைஞர்களுக்குச் சன்னியாசம் வழங்கிச் சீடர்களாக்கி அவர்களைத் தமது இயக்கப் பணிகளில் ஈடுபடுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டுக்காக ஊர்தோறும் கோயில்களை எழுப்பினார். • ? கேரளத்தில் குக்கிராமங்களில்கூட உட்கார்ந்த நிலையில் நாராயண குருவின் சிலைகளைக் காணலாம். "குரு' என்னும் சொல் கேரளத்தில் நாராயண குருவைத்தான் குறிக்கும். தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் கவிதையாடும் ஆற்றல் பெற்ற நாராயண குரு நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். திருக்குறளை மலையாளத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். நாராயண குரு தமது சமகாலத்தவரான வள்ளலாரைச் சந்தித்துத் திருக்குறள் பாடம் கேட்டதாக அவர் வரலாற்றில் குறிப்பொன்று காணப்படுகிறது. நாகர் கோவிலில் ஒரு புத்தகக் கடையில் இளமைக் காலத்தில் அவர் பணி செய்தபோது, தேவார திருவாசகங்களையும் வைணவப் பிரபந்தங்களையும் விரும்பிப் படித்திருக்கிறார். ஒர் இயக்கம் வளர்வதற்கும், வலுப்பெறுவதற்கும் அறிவாற்றலும் செயல்திறனும் மிக்க சீடர்கள் தேவை. இயேசுவுக்குப் பீட்டரும், நபிகள் நாயகத்துக்கு உமரும், இராமகிருஷ்ணருக்கு விவேகானந்தரும் சீடர்களாக வாய்த்தது ஒரு பெரும் பேறு.