பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் - வறிஞனாக இருப்பவன் வள்ளலாக இருக்க முடியாது. ஆனால் குயில் அதற்கு விதி விலக்கு என்று கருதுகிறார். சொந்த வீடு கூட இல்லாத ஏழைக் குயிலிடம் குடிகொண்டிருக்கும் இந்த உயர்ந்த பண்பைப் பாராட்டுகிறார் பாரதிதாசன். சேய்மையிலோர் சோலைக்குச் செல்லும் குயிலினிடம் தூய்மைமிகு பண்பொன்று கேட்பீர்; சுவையைப் படியளக்கும் வையத்தார் உண்ணும் படியே குடியிருப்பொன் றில்லாக் குயில். அழகின் சிரிப்பு என்ற பாவேந்தரின் நூலைக் கண்ணுற்ற செக்நாட்டுத் தமிழறிஞர் காமில் சொலபில் இந்நூலின் தலைப்பே ஒரு கவிதை (The heading itself is a poetry) என்று குறிப்பிட்டார். அழகின் சிரிப்பில் உள்ள புறாக்களைப் பற்றிய பாடல் ஒரு கற்பனைக் களஞ்சியம். ஒற்றுமையுடன் வட்டமாகக் கூடியிருந்து இரையுண்ணும் புறாக்களின் வாழ்வில், வெட்டில்லை; குத்து மில்லை வேறுவே றிருந்த ருந்தும் கட்டில்லை; கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்க மில்லை என்று குறிப்பிடும்போது, மக்கள் வாழ்வில் வெட்டுண்டு; குத்துண்டு; சாதி வேறுபாடுண்டு; பொருளாதார ஏற்றத்தாழ்வும், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வருணபேதமும் உண்டு என்பதைக் கவிஞர் வருத்தத்தோடு ஒத்துக் கொள்கிறார். புறாக்களிடம் காணப்படும் இல்லற ஒழுங்கைச் சுட்டிக் காட்டுவதன் மூலம், மக்களிடம் காணப்படும் குறைகளைக் கண்டிக்கிறார்.