பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ அதன் மறுமலர்ச்சியைப் பற்றியும் எந்தத் தமிழ்க் கவிஞனும் தனிநூல் எழுதவில்லை. அத்தகைய நூலைத் தமிழியக்கம்’ என்ற பெயரில் பாரதிதாசனே முதன் முதலாக எழுதினார். வள்ளுவர் இல்லறவியலில் குடும்ப வாழ்க்கை பற்றிச் சில அதிகாரங்கள் எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் இல்லற வாழ்க்கையின் பண்புகள் சில பாடல்களில் சித்திரிக்கப் பெறுகின்றன. காப்பியங்களும், சில கீழ்க்கணக்கு நூல்களும் குடும்ப வாழ்க்கையின் சிறப்பைப் பற்றிச் சில பாடல்களில் பேசுகின்றன. ஆனால் தமிழரின் குடும்ப வாழ்க்கையைத் தமிழ்ப் பண்போடு ஆராய்ந்து ‘குடும்ப விளக்கு’ என்ற பெயரில் தனி இலக்கியமாக எழுதிய ஒரே கவிஞர் பாரதிதாசன் அவர்களே. ‘அங்கதம்’ என்ற கவிதைத்துறை தொல்காப்பியத்தில் பேசப்படுகிறது. செம்பொருள் அங்கதம், பழிகரப்பங்கதம் என்று அது இரு வகைப்படும். இவ் விருவகை அங்கதங்களுக்கும் எடுத்துக்காட்டுக்களாக எத்தனையோ பாடல்கள் உள்ளன. ஆனால் அங்கதத் துறைக்குத் தனிநூல்கள் ஏதுமில்லை. மேலைநாட்டுக் கவிஞர்கள் அங்கதத் துறையைக் குறிப்பாகப் பழிகரப்பங்கதத்தை Saire என்ற பெயரில் தனித்துறையாக வளர்த்திருக்கின்றனர். ஹொரேஸ், ஜூவனல் என்ற இலத்தீன் ஆசிரியர்களும், ரெபலே, வால்டையர் என்ற பிரெஞ்சு அறிஞர்களும், டிரைடன், போப், டன் என்ற ஆங்கிலக் கவிஞர்களும் பழிகரப்பங்கதத்தை ஒரு தனிக்கலையாகவே வளர்த்திருக்கின்றனர். போப்பின் “கூந்தலின் கற்பழிப்பு’ (Rape of the Lock) என்ற அங்கதக் காப்பியம் உலகப்புகழ் பெற்றது. மேலைநாட்டுக் கவிஞர்களின் அங்கதக் காப்பிய வடிவில் தமிழில், வெளிவந்த முதற்காப்பியம் பாரதிதாசன் எழுதிய சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’. பாரதிதாசனுக்கு