பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் எதிர்ப்பிலே வளர்ந்தவர்! “பாரதிதாசன் கவிஞனே இல்லை. பாரதிக்குப் பிறகு கவிஞன் எவனும் தோன்றவில்லை என்று கட்டுப்பாடாக மேடையிலும், செய்தி ஏடுகளிலும் பிரசாரம் செய்ய ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் கச்சை கட்டிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வெளியாகிக் கொண்டிருக்கும் சில பணக்கார ஏடுகளில் எழுதினால்தான் படைப்பாளன் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை இன்றும் உண்டு. அதை உடைத்தெறிந்தவர் பாரதிதாசன். மிக எளிமையான திராவிட இயக்க ஏடுகளான குடியரசு, திராவிட நாடு, முரசொலி, பொன்னி போன்றவற்றில் எழுதித்தான் பாரதிதாசன் பாவேந்தராக உருப்பெற்றார். அவர் பாவேந்தராக உருப்பெற்ற பிறகு, அதே பணக்கார ஏடுகள் அவருடைய எழுத்துக்களை வேண்டிப் பெற்றுத் தம் ஏடுகளை நிரப்பிக்கொண்டன. அரசாங்க விளம்பரங்கள்கூட அவருடைய மேற்கோள்களையே நம்பி யிருக்கின்றன. பாரதிதாசன் இன்று எல்லாருக்கும் இன்றியமையாதவ ராகிவிட்டார். தொடக்க காலத்தில் கட்சிப் பகைமை காரணமாகப் பொதுவுடைமைக் கட்சியினரும் பாரதிதாசனை ஒதுக்கினர். கட்சி மேடைகளில் பாரதிதாசனைப் பற்றிப் பேசக் கூடாது என்று பொதுவுடைமைக் கட்சி தனது தோழர்களுக்கு ஆணையிட்டிருந்தது. பொதுவுடைமைக் கட்சி தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு முன்பே உருசிய நாடு சென்று திரும்பிய பெரியார், பொதுவுடைமைக் கொள்கைப் பிரச்சாரம் மேற்கொண்டார். பாரதிதாசனும் அதே காலத்தில் லெனினைப் புகழ்ந்தும், பொதுவுடைமைக் கொள்கையை ஆதரித்தும் கவிதைகள் எழுதினார்.