பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் நிறைவான வாழ்க்கை பாரதிதாசன் இந்த நூற்றாண்டில் சிறப்பு மிக்க நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர். புதுவையில் நல்ல வருவாயோடு சிறப்பாக நீண்ட ஆசிரியப் பணி புரிந்து ஒய்வு பெற்றார். திரைப்படத் துறையிலும், எழுத்துத் துறையிலும் இவர் சம்பாதித்தது அந்தக் காலத்தில் அதிகம் என்றே சொல்லலாம். சேமிக்கத் தெரியாதவர்; விருந்து இல்லாத சோறு இவருக்கு மருந்து. தமிழ்நாட்டில் எந்தக் கவிஞனும் தான் வாழ்ந்த நாட்களில் இவ்வளவு புகழோடும் செல்வாக்கோடும் வாழ்ந்ததில்லை. “பேரறிஞர் அண்ணாகூட, பாரதிதாசன் எதிரில் நின்று கொண்டுதான் பேசுவார். அண்ணாத்துரை! ஏ நிக்கற? உட்கார்? என்று இவர் கூறினால் கூட அண்ணா நின்றுகொண்டுதான் பேசுவார். அவ்வளவு மரியாதை பாவேந்தரிடம்” என்று கவிஞர் சுரதா என்னிடம் ஒரு முறை கூறினார். தமிழரிடையே இவரைப்போல், ஒரு பெரிய கவிஞர் பரம்பரையை விட்டுச் சென்ற வேறு கவிஞர் யாருமில்லை. நெருங்கி வந்த ஞானபீடப் பரிசு இந்தியாவிலேயே மதிப்பிற்குரிய மிக உயர்ந்த இலக்கியப் பரிசு ஞானபீடப் பரிசு. தமிழ்நாட்டில் முதன்முதலாக இவருக்குத் தான் அப்பரிசு பரிந்து வைக்கப்பட்டது. பரிந்துரைத்தவர்கள் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார், காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா. கணேசன், பன்மொழிப்புலவர் தெபொ.மீனாட்சி சுந்தரம் ஆகியோர். ஆனால் அப்பரிசு முடிவு வெளியாவதற்கு முன்பே பாரதிதாசன் இறந்துவிட்டார். அப்பரிசு வாழும் கவிஞர்களுக்கு வழங்கும் பரிசு பின்னர் அது மலையாளக் கவிஞர் சங்கர் குரூப்புக்கு அவ்வாண்டு வழங்கப்பட்டது.