பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7

கவிஞரின் ஆற்றலில் அந்தமிழ்ச் செல்வம் விளைவதையெல்லாம் தமிழர்க்கே என்ற அருமையை உணர்ந்தவர் முல்லை முத்தையா. கவிஞரின் சீற்றத்தில் பொய்புனை சுருட்டுகள்’ தோற்றோம் தோற்றோம்’ என்ற மாற்றத்தையும் கண்டவர். நாற்றிசைவாணர்க்கும் கவிஞரின் குழந்தை உள்ளத்தை காற்றிலே மிதக்கும் தென்பாங்காய்ச் செய்தவரும் முல்லை முத்தையாதான்.

கவிஞருக்கும், அவர் உள்ளத்தின் ஊற்ருயிருந்த கவிதைக்கும்-கவிதையோடு தங்களையே பிணைத்துக் கொண்ட அன்பர்க்கும் இடையில் ஊடாடியவர் முல்லை முத்தையா. கவிஞரோடு நேரடிப் பழகாதவர்க்கும் - பழகியவர்க்கும் கவிஞரின் பல்வேறு கோணங்களைக் காலத்துக்குத் தக்கவாறு இங்குச் சுருக்கமாக முத்து முத்தாக வழங்கியுள்ளார் முத்தையா.

நூலாசிரியர்-வெளியீட்டாளர் என்ற வணிக உறவை மீறிய வாழ்வுறவு கொண்டவர் நூலாசிரியர். ஆதலால்தான் நாற்றங்கால் பயிரின் நளினத்தையும் ஊற்றோடையின் பம்மலும் பாய்ச்சலும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காண்கிறோம். நுகர்கிறோம். நம்மையும் அறியாமல் மனத்தின் நினைவு நாக்குகள் அறுசுவை இன்பத்தைச் சுவைக்கின்றன. அறிவின் விழிகள் குறுநகையின் அரும்பை அலர்த்துகின்றன. இந்நூலின் அறுசுவைக் குறிப்புகள் அப்போதைக்கப் போது தெறித்தவையே அன்றி வெறித்தவை அல்ல.

ஒரு கவிஞனின் ஒவ்வொரு கணப்பொழுதும் ஓர் உண்மைக் கவிதை, வாழ்வின் படைப்பு எனலாம். கவிஞன், தான் வாழும் காலத்தின் ஒரு பகுதியாகவும் கடந்த கால நற்பண்பின் ஒளியாகவும், எதிர்காலத்தின் குரலாகவும் விளங்குவதைக் கவிஞரோடு தொடர்புடைய ஒருவரே உணரமுடியும். அப்படி உணர்ந்த காலத்தின் அணிவகுப்புப் படப் பிடிப்புகளே இந்நூலின் அறுசுவைப் பக்கங்கள்.