பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

பாவேந்தரோடு பழகிவிட்டவர்கட்கு, அவருடன் இருந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதில் தீராத வேட்கை, செந்தழலைப்பெற்ற சந்தனக் கட்டையைப்போல் மணந்து கொண்டே இருக்கும் அதற்கொறு சான்று இந்நூல்.

முல்லை முத்தையாவின் நறுக்குகள் உணர்ச்சிப் பெருக்கின் வெள்ளத்தில் நம்மை மூழ்கடிக்காமல் சொற்சித்திரங்களாக நம்முன் தீட்டப்பட்டுள்ளன. ஒளிவு மறைவின்றி நெஞ்சத்தின் நினைவுச் சுனையிலிருந்து வாழ்வு நிகழ்ச்சிகள் தேனருவியாகக் பொழிகின்றன.

செய்தி மோப்பம் பிடிப்பதிலும், நிகழ்வின் சுவைகளை மகிழ்வோடு உண்பதிலும் முல்லை முத்தையாவுக்கு இருந்த ஆர்வமும் அக்கறையும் பழகு தமிழில் பாட்டுணர்வு மிகுந்த பாநயம் வாய்ந்த உரைநடையைத் தந்துவிட்டன. முல்லை முத்தையாவின் இந்நிகழ்ச்சிக் குறிப்புகள் பாரதிதாசனின் நடையின் எதிரொலியோ என்று திகைக்க வைக்கின்றன.

பாவேந்தரின் பல்வேறு பண்பின் பெருமையை உயிரோட்டம் மிகுந்த நாடக ஒவியங்களாக நம் முன் படைத்த முல்லை முத்தையாவின் சொல்லின் மாட்சிமை கவிஞரைக் கண்முன் நடமாடவிடும் முழுமையும் முதன்மை யும் கொண்டதாகும். தமிழரின் பேரவாவினை நிறைவு செய் யும் மற்ற நிகழ்ச்சிச் சிற்பங்களையும் நம் அகவிழிக்கும் புற விழிக்கும் கொண்டுவர வேண்டுகிறேன்.

அன்பன்,
த. கோவேந்தன்.