பக்கம்:பிராயச்சித்தம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 லா. ச. ராமாமிருதம் ஒரு சிறு பங்கு, மூச்சோடு இனி திரும்பி வராத பங்கு, நாசிவழியே வெளிப்படுவதை உணர்ந்தார். உயிரின் செலவே இப்படித்தான் சிறுக...சிறுக...அரித்து...அரித்து... பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் தன்னை மறக்கும் முயற்சியில் ஒடியாடித் திரிந்து, உடல் ஒய்ந்து அறுபதை எட்டி, மன நிலையின் ரணம் முற்றிலும் ஆறிவிட்டதா, அல்ல மேலுக்கு ஆறினாற்போல் காட்டிற்றா? தர்மராஜ னாலேயே தனக்குக்கூட திடமாக சொல்லிக்கொள்ள முடியாது. ஆனால் எப்படியிருந்தால் என்ன? போனால் என்ன? என்று ஒருவிதமான விரக்தி, ஒட்டுதலற்ற தன்மை, ஒட்டுதலையே விரும்பாத தன்மை மனதில் வெகு வெகு நுட்பநிலை, மாண்டில் திரி போன்று வெளித் தோற்றத்துக்கு அழகிய புஷ்பம், தொட்டால் பிசுபிசு அவ்வளவுதான். ஆகையால் தொடாதே, தொடப் படாதே. தொடவிடாதே என்கிற ஒரு ஜாக்கிரதை, உள் கூச்சம், ஒரு நுட்பமான, நீண்டு புகைந்துகொண்டிருக்கும் கோபம். இந்த நிலையில்தான் தற்செயலாக கோமதியை மீண்டும் அவள் பணியாற்றிக்கொண்டிருந்த பாங்க் ஆஃப் பரோடாவில் சந்தித்தார்.