உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதுர்த்தி விரதம் 3 ஆனால், இதே வித்தக விநாயகர் மற்றொரு தடவை இப்படித் தன்னுருவைக் கண்டு நகையாடிய சந்திரனை மிகவும் கடுமையாகவே தண்டித்திருக்கிறார். கதை இதுதான். ஒரு நாள் விநாயகர், தேவர்கள் எல்லாம் கண்டு களிக்க கைலாயத்திலே நர்த்தனம் செய்திருக்கிறார். சரிந்த தொந்தி, மோதகம் ஏந்திய கை, குறுகிய கால்கள் இவைகளுடன் ஆடிய விநாயகரது நடனத்கைக் கண்டு, சந்திரன் சிரித்திருக்கிறான். ஆம். யாருக்குத்தான் விநாயகர் அல்லது விநாயகரைப் போன்ற உருவம் படைத்தவர்கள் நடனம் ஆடுவதைக் கண்டால் சிரிக்காமலிருக்க முடியும்? ஒன்று, சந்திரன் சிரிப்பை அடக்கியிருக்கவேண்டும் இல்லை முன்னர் கூறிய சின்னஞ் சிறுமியைப்போல அப்படிச் சிரித்ததற்கு ஒரு பொய்யையாவது கற்பனை பண்ணிச்சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யவில்லை ; வாய் விட்டே சிரித்துவிட்டான் அவன். அவ்வளவுதான், கோபம்.பொத்துக் கொண்டு வந்து விட்டது விநாயகருக்கு. அதனால் பிடி சாபம் என்று கோபமாக சந்திரனைச் சபித்தேவிட்டார். சாபமோ, அன்று முதல் சந்திரன் உருவை ஒருவருமே பார்க்கம்ாட்டார்கள் கண்டவரும் நிந்தை செய்து ஒதுக்கி விடுவார்கள் அத்தகைய நீசனாக அவன் ஆகட்டும் என்பதுதான். பூரண கலை பொருந்திய உருவம்கொண்ட சந்திரனோ, அன்று முதல் கலை இழந்து, தேய்ந்து தேய்ந்து மெலிந்தான். கண்டவரும் வெறுத்து ஒதுக்கினார். வெட்கத்தால் உருவம் குன்றிய சந்திரன், பிரமணிடம் சென்று முறையிட்டான். சாபமிட்டவர் தான் சாப விமோசனத்தையும் அருளவேண்டும் என்று சொல்லி சந்திரனை விநாயகரிடத்தில் கூட்டிச் சென்றார் பிரமன், சந்திரனும் விநாயகர் திருவடியில் விழுந்து வணங்கி, தெரியாது செய்த பிழையை மன்னித்தருள வேண்டினான். பிரம்மாவும் அவனுக்காகப் பரிந்து பேசினார். தவறு செய்ததற்கு தண்டனை செய்ய வேண்டியதுதான். ஆனால் அது நிரந்தர தண்டனையாக இருக்க வேண்டாமே ; வருஷத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே அந்தத் தண்டனையை அவன் அனுபவிக்குமாறு அருள் புரியலாமே என்றார் பிரமன், விநாயகரும் மனம் இரங்கி 'சுக்ல சதுர்த்தியில் உன்னைக் காண்பவர்கள் எல்லாம் வீண் அபவாதம் அடையட்டும், ஆனால் ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில், என்னைப் பூஜித்தால் அந்த அபவாதம் நீங்கட்டும் என்று சாபத்தை மாற்றி அருளினார். இது காரணமாகத்தான் வளர்பிறை சதுர்த்தியன்று, இன்றும் மக்கள் சந்திரனைப் பார்க்காது ஒதுக்கிறார்கள். அப்படித் தப்பித் தவறிப் பார்ப்பவர்களும், ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் விரதம் அனுஷ்டித்து விநாயகரை வணங்கி, சாப விமோசனம் பெறுகின்றனர்.