அவதாரம் 6 விநாயகரது பிறப்பைப்பற்றி எத்தனையோ கதைகள். அவைகளில் மிகக் கேவலமான கதைகளும் கூட உண்டு. என்றாலும் இரண்டு கதைகள் பிரசித்தமானவை; நம் கவனத்தைக் கவரக்கூடியவை. உமையும் சிவனும் ஒரு நாள் உய்யான வனத்திற்குச் செல்கிறார்கள். அங்கே ஒரு பிடியும் களிறும் கலவியில் களிப்பதைக் காணுகிறார்கள். அம்மையும் ஐயனும் பிடியும் களிறுமாக மாறிக் களிக்கின்றனர். அந்தக் கலப்பில் பிறக்கிறார் விநாயகர். இப்படிக் கூறுகிறது.சுப்பிரபேத ஆகமம், அதையே சொல்கிறார் ஞானசம்பந்தர். பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகணபதி வர அருளினன் என்று. அதையே கொஞ்சம் மாற்றிக் கூறுகிறது காஞ்சிப் புராணம். சிவபிரானும் உமையும் ஓர் உய்யான வனத்திற்குச் செல்கிறார்கள். அங்குள்ள மந்திரசாலையில் பிரணவம் எழுதப் பெற்றிருக்கிறது. அதையே ஊன்றி நோக்கின்றனர் இருவரும். அந்த நோக்கிலே விநாயகர் அவதரிக்கிறார் என்று. இந்தப் புராணக் கதைகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில் இவர் பிறந்தது கலைஞனது சிந்தனையில் தான். மக்கள் மாக்களுக்குள்ளே உருவத்தாலும் அறிவாலும் ஆற்றலாலும் சிறந்து விளங்குவது யானை, வயதால் கூட 120 வருஷம் வரை ஜீவித்திருக்கக் கூடியது அது. அதனால்த்தான் உலகத்தைக் தாங்கி நிற்கும் அஷ்ட திக்கஜங்களாக அதனைக் கற்பித்திருக்கிறார்கள், நமது முன்னோர். எவ்வளவோ வலிமையுடையதாக இருந்தாலும், ஒரு கட்டுக்குள் அடங்கி நிற்கும் இயல்பும் வாய்க்கப் பெற்றிருத்தலால், விரிந்த மனத்திற்கும், நிறைந்த அறிவுக்கும், உருவம் கொடுத்துக் கடவுளை உருவாக்க எண்ணியபோது, களிற்றின் உருவத்தைக் கற்பித்திருக்கிறான் கலைஞன். கண்டது, கேட்டது, உணர்ந்தது எல்லாவற்றையும், எக்காலத்திலும் மறவாத அதி அற்புத ஞாபக சக்தி யானைக்கு உண்டு, என்பதை எத்தனையோ கதைகளின் மூலம் அறிவோம் நாம் மிக்க வலிமை பெற்றிருக்கின்ற அதே நேரத்தில், அளப்பரும் சாந்தமும் உடையது யானை, இதம் செய்வார்க்கு வசமாய் உதவுவதிலும் யானையைவிடச் சிறந்த உயிரே இல்லை, என்பது அறிஞர் துணிபு. ஆதலால் அருங்குணங்கள் பல அமைந்த யானையின் தலையுடன் ஒரு கடவுளை உருவாக்கிய கலைஞன் பாராட்டுதற்கு உரியவன் தானே.
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/16
Appearance