முன்னுரை எங்கள் திருநெல்வேலியில் ஒரு விரதம், வசனம் இருப்பது என்று. அதாவது செந்தில் ஆண்டவன் சந்நிதியில் ஒரு மண்டலம் - நாற்பது நாள் கோயிலில் தங்கியிருந்து அங்கு கிடைக்கும் உணவையே உண்டு, தவம் கிடப்பதுதான். இதனால் தீராத வியாதிகள் திரும் என்பது நம்பிக்கை. இரண்டு வருஷத்திற்கு முன்பு நான் திருச்செந்தூர் சென்றிருந்தபோது இப்படி வசனம் இருப்பவர்கள் ஒரு சிலரைக் கண்டேன். எனக்கும் ஒரு ஆசை. திராத வியாதிக்காக அல்ல என்றாலும், தீராத வினைகளைத் தீர்த்தருள வல்லவன் சந்நிதியிலே, இப்படி ஒரு விரதம் இருக்கலாமே என்று. உண்ணும் உணவில் ஒரு கட்டுப்பாடு அத்துடன் பேசும் பேச்சிலேயும் ஒரு நிதானம். ஆம். மெளன விரதமே அனுஷ்டிக்கலாமே என்று எண்ணினேன். இந்த ஆசை உள்ளத்தில் உருவாகிக் கொண்டிருந்தபோது, சகோதரர் திரு.சா.கணேசன் அவர்களுடன் ஒருநாள் பிள்ளையார்பட்டிக்குச் சென்றேன். கோயில், குளம், மூர்த்தி எல்லாம் எனக்கு ஒர் இன்ப உணர்ச்சியைக் கொடுத்தன. என் உபாசனாமூர்த்தி பிள்ளையார் ஆனதினாலே, பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் சந்நிதியிலேயே மெளன விரதம் அனுஷ்டிக்க விரும்பினேன், சென்ற வருஷம், நாளும் கிழமையும் ஒத்து வரவில்லை. என்றாலும் சென்ற மே மாதம் ஐந்து தினங்கள் அங்கு தங்கினேன் மெளன விரதம் அனுஷ்டித்தேன். விநாயகர் அகவலைப் பாடி ஆரம்பித்த விரதத்தை விநாயகர் அகவலைப் பாடியே பூர்த்தி செய்தேன். இந்த விரதத்தை இனி வரும் வருஷங்களிலும் அனுஷ்டிக்க வேண்டும் அதற்கு இறை அருள் கூட்டுவிக்க வேண்டும் என்பதே இன்று என் பிரார்த்தனை. இப்படி ஒர் ஈடுபாடு, எனக்குப் பிள்ளையார்பட்டி பிள்ளையாரிடத்திலே. இதைத் தெரிந்த நண்பர் திரு.பழ.கண்ணப்ப செட்டியார் அவர்கள் பிள்ளையாரைப் பற்றி ஒரு சிறு நூல், பெண்களும் பிள்ளைகளும் படித்து அனுபவிக்கும் அளவிலே எழுத வேண்டும், என்றார்கள். அவர்கள் இட்ட பணியை ஆசையோடும் ஆர்வத்தோடும் நிறைவேற்ற முயன்றிருக்கிறேன், ஆற்றல் இல்லாவிட்டாலும் கூட. இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திய நண்பருக்கு நன்றி. பிள்ளையார்பட்டிப் பிள்ளையாருக்கு என்.வணக்கம். கோவை 8.9.56 தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/7
Appearance