உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் என்ற இந்தச் சிறு நூலை ஆக்கித் தந்துள்ளவர், எங்கள் தந்தையார் திரு.தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள். தொண்டைமான் அவர்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழ் கூறும் நல்லுலகம், அதிலும் ஆன்மிக உலகம், அவரை நன்கு அறியும். அரசுப் பணியிலிருந்த போதும், பணியிலிருந்து ஓய்வு பெற்ற போதும், தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றியும் தமிழ் நாட்டுக்கு வடக்கே உள்ள கோயில்களைப் பற்றியும், தொண்டைமான் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள வேங்கடம் முதல் குமரிவரை என்ற கட்டுரைத் தொகுப்புக்களும், வேங்கடத்துக்கு அப்பால் என்ற கட்டுரைத் தொகுப்பும், இன்றும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பிள்ளையார்பட்டி பிள்ளையார் என்ற இந்த நூல், 1956 ஆண்டு,எழுதப்பட்டதாகும். இந்த நூலை எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்து, அவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தியவர்கள் இருவர். திரு.பழ.கண்ணப்ப செட்டியார் அவர்களும், கம்பன் அடிப்பொடி திரு.சா.கணேசன் அவர்களும் தாம், இந்த நூல் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்கள். கம்பன் அடிப்பொடி திரு.சா.கணேசன் அவர்களே, பிள்ளையார் பட்டித் தல வரலாறு என்று ஓர் அருமையான ஆராய்ச்சி நூலை எழுதியிருக்கிறார்கள். தொண்டைமான் அவர்கள் எழுதியுள்ள இந்த நூலுக்கு, மறுபதிப்பு வரவேண்டும் என்று அன்பர் பலர் விரும்பினார்கள். மகாப் பெரியவர், பரமாச்சார்யார், அவ்வையார் ஆக்கித் தந்துள்ள விநாயகர் அகவலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையையும், விநாயகர் அகவலையும், பிள்ளையாரைப் பற்றி அறிஞர் பலரின் துதிப்பாக்களையும் இந்த நூலுக்குப் பிற்சேர்க்கையாக இணைத்திருக்கிறோம். இந்தப் பதிப்பு வெளிவருவதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் அருள்மிகு திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலரும், அன்புச் சகோதரருமான திரு.பா.இரா.சண்முகம் அவர்கள். 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட திரு.தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அறக்கட்டளையின் மூலம் இந்த நூல் வெளியிடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. இந்த நூலை, இத்தனை அழகாகவும் அருமையாகவும் அச்சிட்டு வழங்கியருப்பது மாணவர் நகலகம். அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகிறது. வேழ முகத்து விநாயகனின் அருள் அனைவருக்கும் கிட்டவேண்டும் என்று வாழ்த்தி, இந்த நூலை, தமிழ் மக்கள் முன் படைக்கிறோம். நன்றி. வணக்கம். பாஸ்கர நிலையம், ராஜேஸ்வரி நடராஜன் 10, 7வது குறுக்குத்தெரு, சரோஜினி சுப்பிரமணியம் சாஸ்திரி நகர், சென்னை - 20, Úl.01.2000