பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


4.
சுதந்தர மிட்டாய்

பொழுது விடிந்தால் சுதந்தரத் திருநாள். இரவெல்லாம் கண் விழித்து, விதவிதமான மிட்டாய்களைச் செய்தவண்ணமிருந்தான் பாவாடை. மைதாமாவும் ஜீனியும் அவன் கையில் வண்ண வண்ண நிறங்களில் அழகிய பண்டங்களாக உருப்பெற்று வளர்ந்து பெருகின. அவன் மனைவி மாரியம்மாளும் அவனுக்கு ஒத்தாசையாக இருந்தாள்.

அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்த பையனுக்கு ஒன்பது வயது. ஐந்தாவது படித்து வந்தான். இளையவனுக்கு மூன்று வயது. குழந்தைகள் விழித்துக்கொண்டிருந்தால் தங்கள் வேலை நடக்காது என்று மாரியம்மாள், இரண்டிற்கும் விளக்கு வைத்ததுமே சோற்றைப் போட்டுத் தூங்கச் செய்துவிட்டாள்.