பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

மனைவியின் ஆறுதலொன்றும் பாவாடையின் செவியில் நுழையவில்லை. வாசலிலே வந்து நின்ற 'ஜீப்' பின் ஒசை அவன் கவனத்தைத் திருப்பியது.

அதிலிருந்து இறங்கிய ஒரு போலீஸ்காரர் பாவாடையின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு காரில் ஏறும்படி கூறினர். ஒன்றும் புரியாத அவன் 'மிரள மிரள' விழித்தவண்ணம் மனைவியின் முகத்தை நோக்கினான். அவள் ஒரேயடியாக, பயந்து போய் நின்று கொண்டிருந்தாள். மறு நிமிஷம் பாவாடையைச் சுமந்து சென்ற 'ஜீப்' அரசாங்க விருந்தாளிகள் விடுதியின் வாசலல் வந்து, ஓர் உலுக்கு உலுக்கி நின்றது.

உள்ளே நுழைந்த பாவாடை அங்கே கண்ட காட்சி! அவனால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.

அவனுடைய பையன் தணிகாசலத்தைக் கல்வி மந்திரி தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

திலகர் பள்ளியில் மந்திரியின் முன்னிலையில் நிகழ்ந்த ஆறு போட்டிப் பந்தயங்களிலும் முதல் பரிசைத் தட்டிவிட்ட தணிகாசலம், மந்திரியின் மனத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டான். அவனை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டி, உள்ளம் கனிந்த அன்புடன் பரிசுகளை அவரே அவனுக்கு வழங்கினார்.

தனக்குக் கிடைத்த அந்தச் சலுகையை வைத்துக் கொண்டுதான் தணிகாசலம், மந்திரியை ஜாகையில் சென்று சந்தித்து, காலையில் அவர் பள்ளிவரும்போது 377-ஆல் தன் தந்தை வியாபாரத்தில் அடைந்த நஷ்டத்தைப்பற்றிக் கூறினான்.

அவனுடைய தைரியத்தையும், குடும்பப் பொறுப்பையும் உணர்ந்து மகிழ்ந்துதான் மந்திரி பாவாடையை அழைத்து வரச் சொல்லியிருந்தார்.