பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32

தந்தை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. ஆகவே, இந்த முறை எப்படியும் அப்பாவினுடைய அந்த ரகசிய அறையைப் பார்க்காமல் தான் பட்டணம் திரும்பப் போவதில்லை என்கிற உறுதியுடன் சென்ருன்.

தஞ்சை ஜில்லாவிலுள்ள பெரிய மிராசுதார்களுள் சேகரின் தந்தை கார்த்திகேயன் பிள்ளையும் ஒருவர். வளமான காவிரிக் கரையில் அவருக்கு நன்செயும் புன்செயுமாக ஏராளமான நிலங்கள். கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டையில் பெரிய பண்ணை. அதன் மத்தியில் அழகான பெரிய மாடி வீடு. சுற்றிலும் ஏராளமான தோட்டம் துரவுகள். கூப்பிட்ட குரலுக்குச் சிமிட்டுகிற நேரத்தில் பத்துப் பேர் கைகட்டி நிற்பார்கள்.

இத்தனையிருந்தும் பிள்ளையின் மனத்தில் ஒரு பெரிய குறை. அது, அவருடைய குடும்பத்தில் பரம்பரையாக யாருக்குமே கல்வி அறிவு-அதாவது போதிய பள்ளிப் படிப்பு-கிடையாது என்பதுதான்.

எத்தனைதான் மலையாகச் செல்வம் குவிந்திருந்தாலும், கார்த்திகேயன் உள்ளத்தில் இது ஒர் உறுத்தலாகத்தான் இருந்தது. இந்தக் குறைக்குச் சிகரம் வைத்தாற்போல் சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது.

கார்த்திகேயன் புதிதாக வாங்கியிருந்த ஒரு நிலத்தில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக, ஒரு தஸ்தாவேஜியை அவரிடம் ஒருவர் கொண்டுவந்து காண்பித்து, தமக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சரி பண்ணிவிடுவதாகக் கூறினார்.

பிள்ளை அந்தப் பத்திரத்தை வாங்கிப் பார்த்தார். அது முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. பேசாமல் நம்பி, ஆயிரம் ரூபாயை எண்ணிக் கொடுத்துவிட்டார். ஆனால், அதன்