பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

தக்க சமயத்தில் கர்த்தரே தோன்றித் தங்களுக்கு அருள் புரிந்ததாகக் கார்த்திகேயன் மகிழ்ந்தார்.

மறுநாள்---

பாதிரியார் குறிப்பிட்டபடியே கல்லூரி முதல்வர் சிபாரிசுக் கடிதத்தைப் பிரித்துப் படித்தவுடன் இடம் கொடுப்பதாகவும் வாக்களித்தார். சேகரின் முதுகைத் தட்டிக் கொடுத்து, "நன்றாகப் படித்து, கல்லூரியின் கௌரவத்தைக் காப்பாற்று" என்று புத்திமதியும் கூறி அனுப்பினார்.

முழு மூச்சுடன் படிப்பிலேயே குறியாகப் படித்துப் பரிட்சை சமயங்களில் இரவு பகல் பாராமல் உழைத்தான் சேகர். அதன் பயன்—

சேகர், கல்லூரியில் மட்டுமல்ல, ராஜதானியிலேயே முதலாவதாகத் தேறி, பல்லாண்டுகளாகக் கிராமத்து அறையொன்றில் தொங்கிக்கொண்டிருக்கும் கவுனைப் போட்டுக்கொண்டு, பட்டத்தையும் வாங்கித் தந்தையின் கையில் கொடுத்துவிட்டான்.

தம் கனவு பலிதமான கார்த்திகேயன் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அது நிறைவேறக் காரணமாயிருந்த பாதிரியாருக்கும், கல்லூரி முதல்வருக்கும் தம் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு மகனுடைய வெற்றியை ஒரு விழாவாகவே கொண்டாடத் திட்டமிட்டார் பிள்ளை.

சென்னையிலுள்ள தமது பங்களாத் தோட்டத்திலேயே விழாவுக்கும் பெரிய விருந்திற்கும் கார்த்திகேயன் ஏற்பாடு செய்துவிட்டார். சேகர் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தான்.

கார்த்திகேயன் தம் கைப்படவே தமிழில் பாதிரியாருக்கும் கல்லூரி முதல்வருக்கும் தவறாமல் விருந்துக்கு வரும்படி வற்புறுத்திக் கடிதம் எழுதியிருந்தார்.