பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

இறைத்துவிட்டுச் செல்லும் வேறு ஒரு பக்தனும் உண்டு. அவன் பெயர் தனபாலன். பெயருக்கேற்றபடி அவனிடம் மிகுந்த செல்வம் மண்டிக் கிடந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் பேராசை அவனை விடவில்லை. தர்மம் என்கிற வார்த்தைக்கே அவனுக்குப் பொருள் தெரியாது. மகா லோபி அவன் கைக்குச் சென்ற பொருள், காலன் வாயில் விழுந்த உயிர்போல, ஒரே ஐக்கியம் தான்!

ஆயினும், செல்வத்தின்மீதுள்ள பேராசையால் அதை மீண்டும் மீண்டும் பெருக்க எண்ணி, தெய்வத்தினிடம் அவன் நம்பிக்கை வைத்தான். 'ஆயிரம் ரூபாய்க்குத் தான் ஆரம்பித்த வியாபாரத்தை லட்சத்திற்குக் கொண்டுவந்த தெய்வம், நம்பினால் ஏன் ஒரு கோடி வரைக்கும் தன்னைக் கொண்டுபோய் விடாது?' என்கிற உள்ளச் சபலத்தினால் ஏற்பட்டதுதான் அவனுடைய நாளுக்கு இருமுறை கோயில் விஜயமும், பைசா பைசாக் கர்ப்பூர்ம் வாங்கித் தவறியும் கொளுத்திவிடாத கடவுள் பக்தியும்!

அன்று சர்மா வழக்கம்போல், ஒரு குரல் உள்ளம் உருகி அழுதுவிட்டுச் சென்ற பத்து நிமிஷங்களுக்கு எல்லாம் தனபாலன் உள்ளே துழைந்தான். அப்போது தற்செயலாய்த் தெய்வங்கள் இரண்டும் கர்ப்பக் கிருகத்தில் இருந்து பேசிக்கொள்வது தனபாலன் செவிகளில் விழவே, 'சட்' டென்று சனிபகவான் சந்நிதிப் பக்கமாக வந்து ஒளிந்துகொண்டபடி தெய்வச் சம்பாஷணையை உன்னிப்பாகக் கேட்டான்; கடவுளுக்குத் தெரியாமல் ஒட்டுக் கேட்பதாகத்தான் அவன் நினைப்பு!

"ஏண்டா கணபதி, அந்தச் சர்மாதான் இப்படித் தினம் பசியும் பட்டினியுமாகக் கிடந்து கூண்டோடு நொந்து மாய்கிறானே! அவனுக்கு இன்னும் நீ ஒரு வழி செய்யக் கூடாதா?" — இது பரமசிவனின் குரல்.