பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

குழந்தை கண்ணனை வாரி அணைத்துக் கொஞ்சாதவர் பாக்கி இல்லை. டைரக்டர் குழந்தையை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சினார். 'ஐஸ் கிரீமும்' 'புரூட்சாலட்டும்' எதிரில் கொண்டுவந்து வைக்கப்பட்டன. கண்ணனின் வாயில் சம்பூர்ணமே ஐஸ் கிரீமை ஸ்பூனால் ஊட்டினார்.

ஒளிப்பதிவாளர், காட்சிகள் பிரமாதமாகப் படமாக்கப்பட்டுவிட்டனவென்றும், பேபி கலா வெளுத்து வாங்கிவிட்டதாகவும் வானளாவப் புகழ்ந்தார்.

"சும்மாவா இத்தனை பேரும் புகழும் வந்திருக்கின்றன? அவற்றையெல்லாம் தெரிந்துகொண்டுதான் கலாவும் நம்மைக் கொஞ்ச நேரம் ஆட்டி வைத்தாள்" என்று பெருமையுடன் கூறிக்கொண்டே பத்மாசனி அம்மாளும் அங்கு வந்து நின்றாள்.

"எத்தனை அடம் பண்ணினால் என்ன? எப்படியோ குழந்தை இறுதியில் பிரமாதமாக நடித்துவிட்டாள். பட்ட பாடெல்லாம் மறந்து போய்விட்டது" என்று குழந்தையின் உச்சந்தலையில் ஒரு முத்தம் கொடுத்தார் டைரக்டர். மறு விநாடி அவரது முகம் சுளித்தது. “இது என்ன....இது.....? வேப்பெண்ணெய் வாசனை..... வீசுகிறது....?"

மயில்பீலிகளை விலக்கி மறுபடியும் மோந்தார் அந்த வாசனையை.

'சீ..சீ..என்ன தைலமிது? இந்த வாடை தாளாமல்தான் குழந்தை இத்தனை அடம் பண்ணியதோ என்னவோ...?' என்று மேக் - அப் நிபுணரைப்பற்றிக் குறைவாக எண்ணிக்கொண்டிருக்கும் போதே,

முகாமுக்கு வெளியிலிருந்து யாரோ உரக்க அழைக்கிற குரல் கேட்டது. எல்லோரும் விரைந்து சென்றனர்.

பி.சி—4