பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

முதலாளியினுடைய இந்த நீண்ட நேரப் பேச்சையும், அவருடைய ஆணையையும் மதித்து ஒருவராவது ஒரு வார்த்தை பேச வேண்டுமே! ஊஹூம், அவர்கள் வாயே திறக்கவில்லை. இது முதலாளியின் ஆத்திரத்தை இன்னும் அதிகமாக்கியது.

"வயிற்றுக்கு அளக்கிற என்னைவிட, உபதேசம் செய்கிற உங்கள் தலைவன் பெரியவனாகிவிட்டானா? போங்கள், என் முன் யாரும் நிற்க வேண்டாம், போங்கள்."

தொழிலாளர்கள் அமைதியாகக் கலைந்து சென்று விட்டனர். ஆனால், பசுபதியின் உள்ளத்தில் மட்டும் அமைதி ஏற்படவில்லை. வாசு இப்படித் தமக்கெதிராக மாறுவான் என்று அவரால் எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை. "எத்தனை பெரிய துரோகம்-எவ்வளவு இழிவான நன்றி கொன்ற செயல்! சே! பாம்பிற்குப் பாலை வார்த்தேன்" என்று தம்மையே மிகவும் நொந்து கொண்டார். எத்தனை சமாதானம் செய்துகொண்டாலும் அவர் மனம் ஆறுதல் பெற மறுத்தது.

மேனகா மில்லை ஆரம்பித்துப் பூஜை போட்ட அன்றையிலிருந்து வாசு அவர் கம்பெனியில் இருக்கிறான். அன்று மில் இத்தனை பெரிய வளர்ச்சியில் இவ்வளவு ஊழியர்களுடன் தொடங்கவில்லை. அதன் முன்னேற்றம் படிப்படியாக ஒரு குழந்தையின் வளர்ச்சியை ஒத்திருந்தது.

பெற்ற பிள்ளையைப் போல் பசுபதிக்கு வாசுவினிடம் அளவற்ற அன்பு. அவனும் தன்னை அங்கு சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்யும் ஒரு ஊழியனாகக் கருதிக்கொள்ளவில்லை. ஏற்படும் லாப நஷ்டங்களில் பங்கு பெறுபவனைப்போல், மில்லின் முன்னேற்றத்திற்காக, நேரம் காலத்தை மீறி உண்மையுடன் உழைத்தான். இதனால் நாளடைவில் முதலாளி அவனிடம் மிகப்பெரிய