பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

பொறுப்புக்களையெல்லாம் ஒப்படைத்து விட்டுத் தொழிலைப்பற்றிக் கவலைப்படாமலே இருக்கத் தலைப்பட்டார்.

வாசுவும் அதை உணர்ந்து நடந்தான். முதலாளி தனக்கு அளித்துள்ள விசேஷ உரிமைகளையும், அதிகாரங்களையும் அத்துமீறி உபயோகிப்பதில்லை. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரையும் வாசு தன் உடன் பிறந்த சகோதரர்களைப் போலவே நேசித்து அவர்களிடம் அன்பு பாராட்டினான். இதனாலேயே மேனகா மில்ஸ் தொழிலாளர்கள் அனைவரும், முதலாளியைத் தந்தையாகவும், வாசுவைத் தலைமகனாகவும் மதித்தனர்.

ஆனால், வாசு இதுவரை தனக்கென்று எதையும் முதலாளியிடம் சென்று கேட்டதில்லை. கம்பெனி லாபமாக நடப்பதால் தொழிலாளருக்கு ஒரு மாதப் பொங்கல் போனஸ் கொடுக்கலாமென்று சிபாரிசு செய்தான். முதலாளி சிரித்துக்கொண்டே இசைந்துவிட்டார்.

நான்கு வருஷங்கள் கழித்து, போனஸை இரண்டு மாதமாக்கினான் வாசு. சிரிக்காமலே அவர் அதற்கும் மறுக்கவில்லை. ஆனால், இப்போது இந்த வருஷமும் பொங்கல் நெருங்குகிற சமயத்தில், 'மீண்டும் வாசு தொழிலாளர்களைக் கூட்டிக்கொண்டு ஏதோ தீவிரமாகப் போனஸ் விஷயமாகப் பேசுகிறான்' என்று பசுபதி அறியவுமே, 'சே, இவர்களது ஆசைக்கு ஓர் அளவே இல்லையா? ஏற்கனவே இந்த வருஷம் கம்பெனிக்கு ஏக நஷ்டம். வழக்கமான போனசை கொடுப்பதே சிரமம். இவற்றையெல்லாம் சற்றும் உணராமல், சுவரை இடித்து விட்டுச் சித்திரம் தீட்ட முயல்கிறார்களே இவர்கள்' என்று அவருக்குப் பிரமாத கோபம் வந்துவிட்டது. ஆனால், இந்தச் சமயத்தில் வாசு ஊரில் இல்லை. நான்கு நாள் லீவில் சென்றிருந்தான். அதனால்தான் அவர் தமது தொழிலாளர்களை அழைத்து, "வாசு உங்களுக்கு