பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

"செய்யத்தான் போகிறேன், அப்பா! கல்லுமாதிரி உட்கார்ந்திருக்கிறேன் என்றால் காலம் வரவில்லை! காத்திருந்தேன். சர்மா பக்குவம் அடைந்துவிட்டான். இப்போது ஒரு நல்ல ஏற்பாடும் செய்துவிட்டேன்" — இது பிள்ளையாரின் குரல்.

என்ன ஏற்பாடு குழந்தாய் அது?"

"வருகிற புதன்கிழமையன்று ஐயாயிரம் ரூபாய் அந்தச் சர்மாவுக்குக் கொடுக்கப்போகிறேன்!"

"அப்படியா? ரொம்பச் சந்தோஷம்! பிள்ளை குட்டிக்காரன். சம்சாரி, பிழைத்துப் போகட்டும்!"

இதற்குள் எங்கோ வேறு மனித அரவம் கேட்கவே, தெய்வங்கள் இரண்டும் மீண்டும் மெளனிகளாகிவிட்டன. ஆனால், தனபாலன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தெய்வ சம்பாஷணையின் சாராம்சத்தை அறிந்துகொண்டுவிட்ட அவன் மனம், சந்தோஷ மிகுதியால் குதிபோட்டது.

பெரிய தேவரகசியத்தையல்லவா கேட்டுவிட்டான்! சர்மாவுக்குக் கடவுள் கொடுக்கப்போகும் பொருளைப் பற்றி -அதாவது நாளைய விதியைப்பற்றி அல்லவா அவன் அறிந்துவிட்டான்! மனம் கட்டு மீறி அலைந்தது. எப்படியாவது சர்மாவுக்குப் பிள்ளையார் கொடுக்கப்போகும் பணத்தைத் தந்திரமாகத் தான் அடைந்துவிடுவதற்கான குறுக்கு வழிகளில் அவன் மூளை வெகு தீவிரமாக வேலை செய்தது!

'ஏழைச் சர்மாவுக்கு இத்தனை பணம் ஒரேயடியாக எதற்கு?’ என்பது ஒரு காரணம். அப்படியே கிடைத்தாலும், அதை அருமை தெரிந்து தன்னைப் போல் வைத்துக் காப்பாற்றத் தெரியுமா அவருக்கு என்பது மற்றறொரு காரணம்!