பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வேண்டாம். முன்பின் பரிச்சயமில்லாதவர்கள்கூட, யாராவது பெயரைச் சொல்லி அழைத்தாலும் தயங்காமல் செல்லும்" என்று எல்லா வழிகளையுமே விவரமாக விளக்கினன். ஏனென்றால், வரப்போகிற ஆதாயத்தை எண்ணி, முன்பே துணிந்து முதல் போட்டவனல்லவா அவன்? அந்தப்படியே நடப்பதாக ஒப்புக்கொண்டார் சர்மா. தம்மை நம்பி ஆயிரம் ரூபாயைக் கொடுத்திருக்கிறானே என்கிற விசுவாசம் அவருக்கு.

ஆனால் என்ன ஆச்சரியம்! உஞ்சவிருத்திக்குக் கிளம்பிய சர்மா, ஒரு நாளுமில்லாமல் அன்று மட்டும் சோதனை போல், பிடி அரிசிகூடக் கிடைக்காமல், மிகச் சோர்வுடன் வீடு திரும்பினார். தனபாலன் தெரிவித்ததுபோல் துணி மூட்டைக்குப் பதில் ஒரு கல்லைக்கூட அவர் வழியில் காணவில்லை. தெரிந்தவர்கள்கூட அன்று ஏனோ முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்; சலனமடையாத சர்மாகூடச் சஞ்சலம் அடைந்தார்.

ஆனால், தனபாலனுக்கு மிகுந்த ஆத்திரந்தான் வந்தது. "நீர் ஆகாசத்தைப் பார்த்தபடி கண்ணை மூடிக் கொண்டு கூப்பிடுவதுகூடக் காதில் விழாமல், மெய்ம்மறந்து நாம பஜனை செய்துகொண்டு போயிருப்பீர்" என்று இரைந்தான். ஆனால் சர்மா, இன்று நான் அப்படி நாம பஜனைகூடச் செய்யவில்லை என்று ஒரேயடியாகச் சாதிக்கவுமே, அவனது அடங்காத கோபமெல்லாம், தன்னை ஏமாற்றிய பிள்ளையார்மீது திசை மாறிப் பாய்ந்தது.

வேகமாகக் கோயிலை அடைந்தவன், ஆத்திரம் தீரத் திட்டிக்கொண்டே, பொய் சொன்ன குற்றத்திற்காகப் பிள்ளையாரின் தொந்தியில் தொடர்ந்து குத்துகள் விட்டான். ஆனால், அப்போதுதான் தனபாலனே திடுக்கிடும்படியான ஒரு சம்பவம் நடந்தது.

அவன் பிள்ளையாரைக் குத்திக்கொண்டிருக்கும் போதே, மரத்தைச் சுற்றி மலைப்பாம்பு இறுக்குவதைப்