பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

போல், தன் கழுத்தை ஏதோ ஒன்று சுற்றி வளைப்பதை உணர்ந்தான். மறுகணம் பிள்ளையாரின் நீண்ட துதிக்கையினுள், தயிர் மத்துப்போல், இறுக்கப்பட்டு நின்றான் தனபாலன். அந்த இரும்புப்பிடியின் அணைப்பிலே மூச்சுத் திணறிக்கொண்டிருந்த தனபாலனது செவிகளில் சற்றைக்கெல்லாம் பழக்கமான ஏதோ ஒரு குரல் விழுந்தது.

"ஏனப்பா! கணேசா, இன்றுதானேடா புதன் கிழமை? முன்பு நீ சொன்னபடி சர்மாவுக்கு ஐயாயிரம் ரூபாயைச் சேர்ப்பித்துவிட்டாயோ?” என்றார் பரமசிவன், ஒன்றும் அறியாதவர்போல்.

"'ஆஹா! நான்கு நாட்களுக்கு முன்னமேயே ஆயிரம் ரூபாயை அனுப்பிவிட்டேனே! இப்பொழுது மீதிப் பணத்திற்குத்தான் வழி செய்துகொண்டிருக்கிறேன்!” என்று விநாயகர் சொல்லி முடிக்கு முன்னர், "அப்போது மீதி நாலாயிரத்தையும்கூட, நானேதான் கொடுத்து உங்கள் வார்த்தையை நிறைவேற்ற வேண்டுமா?" என்றான் தனபாலன், அழுதவண்ணம், கழுத்து வலி பொறுக்க மாட்டாதவனாய்!

"சந்தேகம் இல்லாமல் நீதான் கொடுக்க வேண்டும்! காசையும் பணத்தையும் உன்னைப் போல் நானா உள்ளே அமுக்கி வைத்துக்கொண்டிருக்கிறேன்?" என்றார் பிள்ளையார்.

அப்போது, "என்னை விட்டுவிடுங்கள், சுவாமி! வீட்டுக்குப்போய்ப் பாக்கித் தொகையையும் கொடுத்துத் தீர்த்துவிடுகிறேன்" என்று கெஞ்சினான் தனபாலன், உயிரின்மீதுள்ள ஆசையினால்.

உடனே, "ஏமாற்றினால் என்ன ஏற்படும் தெரியுமா?" என்றார் பிள்ளையார், சற்று உரத்த குரலில்.