பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

புகழேந்தி நளன் கதை



என்பது மகளிர் கால் சிலம்பில் கேட்க முடிந்தது. வளைவு என்பது வில்லிலே கண்டனர். மக்கள் சொல்லிலே அவர்கள் கண்டது இல்லை.

இத்தகைய வளம்மிக்க நகரில் எங்கும் சோலைகள் நிரம்பி இருந்தன. சேலை கட்டிய மகளிர் இச்சோலைகளில் பூப்பறித்து மகிழ்ந்தனர். புனல் விளையாடினர்; மகிழ்வுடன் விளங்கினர்.

இளவேனிற் பருவம் வந்தது. மன்மதன் தன் கரும்பாகிய வில்லில் மலர்களாகிய அம்புகளைத் தொடுத் தான். தென்றல் வீசியது; அது சோலையில் உள்ள பூக்களின் வாசத்தைத் தெருக்களில் கொண்டு சென்று வீசியது. இளைஞர்கள் கிளர்ச்சி பெற்றனர். சுகமான காற்று அவர்களைக் காம விருப்புக்குத் தூண்டியது: இன்ப வேட்கையை நாடினர்.

பூக்களில் தேன்நாடி வண்டுகள் சென்றன. நளன் சோலைகளில் பூ நாடிச் சென்றான். அவனோடு அந்தப் புரத்து அழகியர் சிலர் உடன் சென்றனர். அவர்கள் முகம் சந்திரன் போல் ஒளி வீசியது. கண்கள் கருங்குவளை என்று அழகு பெற்றிருந்தன. அம்மகளிர் நளனையே சுற்றி வட்டமிட்டனர். அவர்கள் விழிகள் அவனை வளைத்துப் பிடித்தன. அவர்கள் தன்னைச் சூழ்ந்து வர நளன் சோலையை அடைந்தான்.

அங்கே வடிவுமிக்க அன்னப்பறவை ஒன்று பறந்து வந்தது; பசுமையான சோலை அதுதன் பசுமை நிறம் மாறி வெண்மை நிறம் பெற்றது என்று கூறும்படி அதன் சிறகுகள் வெண்மையாகக் காட்சி தந்தன. அதன் தாள் நிறத்தால் பொய்கையின் தலம் சிவப்புப் பெற்றது. இந்தப் புதுமை கண்டு பதுமை நிகர் பெண்களோடு இருந்த நளன் அதனைப் பிடித்து வர அவர்களுள் சிலரை ஏவினான்.