பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

புகழேந்தி நளன் கதை



தேவர் பணிதலைமேற் செல்லும்; திரிந்தொருகால்
மேவுமிளங் கன்னிபால்; மீண்டேகும் - பாவிற்
குழல்போல நின்றுழலும் கொள்கைத்தே பூவின்
நிழல்போலும் தண்குடையான் நெஞ்சு

14. குவளையும் தாமரையும்

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற செய்தியைப் பூக்களில் வைத்துக் கூறுவது பாவிற்குத் தனிச்சிறப்புத் தருகிறது. உருவகங்களில் அமையும் சொல் லாட்சிகளாக விளங்குகின்றன. அவள் விழிகள் குவளை; அவன் கண்கள் தாமரை என்பதை வைத்து இக்கவிதையைப் புனைந்துள்ளார்.

அவர்கள் காதல் நோக்கு அதனை வள்ளுவர் போலவே பொது நோக்கு என்று கூறுகிறார். அந்தக் காதல் நோக்கு அவர்கள் பார்த்த பார்வைகளைக் “குவளையில் தாமரை சென்று பூத்தது"; “குவளை தாமரையைக் கண்டு பூத்தது” என்று கூறும் அழகு சிறப்பாக உள்ளது.

அவள் அவனை நோக்கினாள் என்று கூறாமல் அவன் நோக்கு கண்டு அவள் கண்கள் மலர்ச்சி பெற்றன என்று கூறுவது நுட்பமான செய்தியாகிறது. “பூங்குவளை தாமரைக்கே பூத்தது” என்று கூறுவது காணத் தக்கது.

இவன் அவள் கண்களைக் கண்டு மகிழ்ந்தான் என்கிறார். ‘தேங்குவளை தன்னிலே செந்தாமரை மலர’ என்கிறார்.

குவளையில் தாமரை மலர்ந்தது என்பது அவனுக்கும் தாமரைக்கே குவளை பூத்தது என்று அவளுக்கும் கூறுவது சிறப்புமிக்க செய்திகள். அவள் அவனை நிமிர்ந்து நோக்கினாள் என்றால் தவறாக முடியும்.