பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

புகழேந்தி நளன் கதை




வாரணியும் கொங்கை மடவார் நுடங்கிடைக்குப்
பேருவமை யாகப் பிறந்துடையீர்-வாரீர்
கொடியார் எனச்செங்கை கூப்பினான் நெஞ்சம்
துடியா நெடிதுயிராச் சோர்ந்து 50


கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளஞ் சொற்கரும்பால்
பொங்குசுழி என்னும் பூந்தடத்தில்-மங்கைநறும்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ
வெய்தாமக் காம விடாய் 51

தமயந்தியைக் காணல்

மன்னன் விடுத்த வடிவில் திகழ்கின்ற
அன்னம்போய்க் கன்னி அருகணைய-நன்னுதலும்
தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை
என்னாடல் சொல்லென்றாள் ஈங்கு 52


செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்-மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்தன் உனக்கு 53


அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும்
மறங்கிடந்த திண்தோள் வலியும்-நிலங்கிடந்த
செங்கண்மால் அல்லனேல் தேர்வேந்தர் ஒப்பரோ
அங்கண்மா ஞாலத் தவற்கு 54

தமயந்தியின் நிலை

புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடைய
உள்ளம் கவர ஒளியிழந்த-வெள்ளை
மதியிருந்த தாமென்ன வாய்த்திருந்தாள் வண்டின்
பொதியிருந்த மெல்லோதிப் பொன் 55