பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

169




சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்
தாமுள் ளிழைபுகுந்த தார்வண்டு - காமன்தன்
பூவாளி ஐந்தும் புகத்துயில் புக்கதே
ஒவாது முந்நீர் உலகு 122


ஊன்தின் றுவகையால் உள்ள வுயிர்புறம்பே
தோன்றும் கழுதும் துயின்றதே - தான்றன்
உரைசோரச் சோர உடல்சோர வாயின்
இரைசோரக் கைசோர நின்று 123


அன்றில் ஒருகண் துயின் றொருகண் ஆர்வத்தால்
இன்றுணைமேல் வைத்துறங்கும் என்னும்சொல் - இன்று
தவிர்ந்தே போலரற்றிச் சாம்புகின்ற போதே
அவிழ்ந்ததே கண்ணிர் அவட்கு 124


ஏழுலகும் சூழிருளாய் என்பொருட்டால் வேகின்ற
ஆழ்துயரம் ஏதென் றறிகிலேன் - பாழி
வரையோ எனுநெடுந்தோள் மன்னாவோ தின்னும்
இரையோ இரவுக்கு யான்? 125


கருவிக்கு நீங்காத காரிருள்வாய்க் கங்குல்
உருவிப் புகுந்ததால் ஊதை - பருகிக்கார்
வண்டுபோ கட்ட மலர்போல் மருள்மாலை
உண்டுபோ கட்ட உயிர்க்கு 126


எழுந்திருக்கும் ஏமாந்து பூமாந்த தவிசின்
விழுந்திருக்கும் தன்னுடம்பை மீளச் - செழுந்தரளத்
தூணோடு சேர்க்கும் துணையேதும் இல்லாதே
நானோடு நின்றழியும் நைந்து 127


விரிகின்ற மெல்லமளி வெண்ணிலவின் மீதே
சொரிகின்ற காரிருள்போல் சோரும் - புரிகுழலைத்
தாங்கும் தளரும் தழலே நெடிதுயிர்க்கும்
ஏங்கும் துயரோ டிருந்து 128