பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

189


வேறாகப் போக்குதிரோ என்றார் விழிவழிய
ஆறாகக் கண்ணி அழுது 253


அஞ்சனந்தோய் கண்ணின் அருவிநீர் ஆங்கவர்க்கு
மஞ்சனநீர் ஆக வழிந்தோட - நெஞ்சுருகி
வல்லிவிடா மெல்லிடையாள் மக்களைத்தன் மார்போடும்
புல்லிவிடா நின்றாள் புலர்ந்து 254


இருவர் உயிரும் இருகையான் வாங்கி
ஒருவன் கொண்டேகுவான் ஒத்து-அருமறையோன்
கோமைந்த னோடிளைய கோதையைக் கொண்டேகினான்
வீமன் நகர்க்கே விரைந்து 255


காத லவர்மேலே கண்ணோட விண்ணோடும்
ஊதை எனநின்றுயிர்ப்போட-யாதும்
உரையாடா துள்ளம் ஒடுங்கினான் வண்டு
விரையாடும் தாரான் மெலிந்து 256


சேலுற்ற வாவித் திருநாடு பின்னொழியக்
காலிற் போய்த் தேவியொடும் கண்ணுற்றான் - ஞாலஞ்சேர்
கள்ளிவே கத்தரவின் கண்மணிகள் தாம்பொடியாத்
துள்ளிவே கின்ற சுரம் 257

பறவை ஏய்த்தல்

 
கன்னிறத்த சிந்தைக் கலியுமவன் முன்பாகப்
பொன்னிறத்த புள்வடிவாய்ப் போந்திருந்தான் - நன்னெறிக்கே
அஞ்சிப்பார் ஈந்த அரசனையும் தேவியையும்
வஞ்சிப்பான் வேண்டி வனத்து. 258


தேன்பிடிக்கும் தண்துழாய்ச் செங்கண் கருமுகிலை
மான்பிடிக்கச் சொன்ன மயிலேபோல்-தான்பிடிக்கப்
பொற்புள்ளைப் பற்றித்தா என்றாள் புதுமழலைச்
சொற்கிள்ளை வாயாள் தொழுது 259