பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

புகழேந்தி நளன் கதை



பெருமன்னன் என்பதையும் அவன் நினைத்துப் பார்க்க வில்லை. இந்த வகையில் எளியனாய் நடந்து கொண்டான். செல்வரை அணுகும் வறிஞரைப் போல் அதன் முன் நடந்து கொண்டான்.

பகைவரைக் கண்டு அஞ்சாது வேல் எடுக்கும் வீரன் அவன். மிகவும் தாழ்ந்து விட்டான்; அடக்கமாகப் பேசினான். “அன்னக் குலத்தின் அரசே!” என்று அதனை விளித்துப் பேசினான். “அழிகின்ற என் உயிரை நீ தந்து அளித்தாய்; நீ கண்ட அவளுக்கு எந்தவித இடையூறும் இல்லையே! அவள் நலம்தானா?” என்று கேட்டான்.

பேரரசன் இவன் தன்பால் சொல்லிய செய்திகள் அனைத்தையும் அவன்பால் செம்மையாக உரைத்தது. அவளும் அவனுக்குத் தெரிவிக்கச் சொன்ன செய்திகளையும் கூறியது. இருவர் தம்மிடம் உள்ள காதல் பற்றிய உரைகளையும் மாறி மாறிச் செப்பியது. அவள் தன்பால் நேசம் கொண்டு இருக்கிறாள் என்ற பாசம் மிக்க சொற்களைக் கேட்டான். அவ்வளவுதான்; பித்துப் பிடித்தவன் போல் ஆயினான். அறிவு அழிந்தான். உள்ள அறிவும் கொள்ளை போய்விட்டது என்ற நிலைமை ஏற்பட்டது.

கேட்ட செவி வழியே அவன் உணர்வும் நீங்கியது. அவன் மனம் ஒட்டை மனம் ஆகியது; உளைச்சல் மிக்க மனம் ஆகிவிட்டது. உயிர் தள்ளாடியது. உணர்வும் உயிரும் அவனைவிட்டு நீங்கிய நிலையில் வெறும் சடமாகக் காணப்பட்டான். அவன் ஆழ் துயரினின்று அவனை மீட்க முடியாது என்றுபட்டது. குழியில் விழுந்து விட்ட யானை போல அவன் சாய்ந்தான். நெருப்புத் தழலில் பட்ட தளிர்போல் அவன் வேதனை அடைந்தான். அவன் துடிதுடித்து வேதனையுள் ஆழ்ந்தான். துன்பத்துள் முழுகினான்.