பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

புகழேந்தி நளன் கதை



கடமையை ஆற்றிய கண்ணியத்தையும் பாராட்டி அவனுக்கு உதவக் கூடிய வரங்களைத் தந்தனர். “வேண்டும்போது உனக்கு உணவு, நீர், நெருப்பு, அணிகள், மலர்கள் எவை வேண்டுமானாலும் வந்து சேரும்” என்று நால்வரும் சேர்ந்து நல்வரம் தந்தனர்.

வரம் பெற்றவனாக உரம் கொண்ட நெஞ்சோடு தான் தங்கியிருந்த மாளிகையைச் சேர்ந்தான். மற்றைய மன்னர்களுள் ஒருவனாக அவன் தங்கினான். மறுநாள் எப்போது விடியும் என்று காத்திருந்தான்.

காதலர் இருவரும் கண்ணிணை கொண்டு உணர்வு ஒன்றினர். அதனால் அவர்கள் இதயம் மாறினர். அவன் நெஞ்சில் அவள் இடம் பெற்றாள். அவள் இதயத்தை அவனிடம் தந்து விட்டாள்.

தூது வந்த காதலனிடம் செய்திகள் சொல்லி அனுப்பி விட்டாள். அவன் பின் அவள் நெஞ்சு சென்று விட்டது. அவள் தன் வயம் இழந்தாள். என்ன ஆகுமோ என்று அயிர்த்தாள்; உயிர்த்தாள்; அழகிய முகம் வியர்த்தாள்; உரை மறுத்தாள்; காதலில் வீழ்ந்து துயர் உழந்தாள்.

உள்ளம் போய், நாண்போய், உரைபோய், கண் களில் நீர் வெள்ளம் பெருகி, வேகின்ற மென் தளிர்போல் அவள் உயிர் சோர்ந்தாள். மன்மதன் அம்புகள் அவளைத் துளைத்தன.

மன்மதன் அம்புகள் துளைக்கப்பட்டு அதன் காரணமாகவே உயிர் நீங்கிவிடும் என்று அஞ்சினாள். “என் உயிர் என்னை விட்டு நீங்கினாலும் என் ஆசை ஒழியாது; நீங்காது” என்று கூறி மனம் அழிந்தாள். யாழ் போன்ற சொல்லினாள்; அவள் இனைந்து வருந்தினாள்.

மாலைக் கதிரவன் மேற்கு எல்லையில் சாய்ந்தான். வையகம் பகல் இழந்தது; வானம் ஒளி இழந்தது;