பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

33



பறவைகள் சோலைகளிலும் பொய்கைகளிலும் பேச்சு அடங்கின. செவ்வாய் அன்றில் தன் துணை இழந்து வருந்தியது. கூவி அழைத்தது.

அந்திப் பொழுது வந்து சேர்ந்தது. அது அழகிய நங்கை ஒருத்தி அசைந்து நடந்து வருவது போல இருந்தது. மல்லிகை மலர்ந்து கிடந்தது. வண்டுகள் அவற்றை மொய்த்தன. மன்மதன் மலர்க் கணைகளைக் கொண்டு தன் ஆட்சியை நடத்தினான். அந்த மாலையாகிய நங்கையின் மெய்க் காவலாளாகச் செயல்பட்டான். முல்லைப் பூமாலை தோளில் அசைய நடந்து வரும் நங்கையென அம் மாலைப்பொழுது மெல்ல வந்து சேர்ந்தது. எங்கும் மல்லிகையும் முல்லையும் பூத்து அழகு செய்தன.

அந்திப் பொழுது முறுவல் காட்டி முகிழ் நகை தோற்றுவிப்பதைப் போல் பிறைமதி வானில் தோன்றியது. அதனால் தமயந்திக்கு வேதனை மிகுந்தது. நெருப்பை அள்ளிச் சொரிவது போல அதன் கதிர்கள் விளங்கின. கூட்டு மை போல் இருள் மிக்கு இருந்தது. அந்த இருளில் நிலவு வீசி அவளைச் சுட்டு எரித்தது.

தனக்குத் துணையாக இருந்த அன்னங்கள் அவற்றை அவள் காணவில்லை. ஒளிக்கதிர்கள் தந்த கதிரவனும் மறைந்து விட்டான். அந்த மிக்க இருளில் வாடைக் காற்று வீசி அவளை வருத்தியது. வாடைக்கும் கொடிய இருளுக்கும் பிழைப்பது அரிது என்று கூறினாள்.

அவள் தோழிகளை விளித்து உரையாடினாள். வான் மதியத்தைக் காட்டினாள்; நட்சத்திரக் கூட்டத்தையும் காட்டினாள்.

அவர்கள் அது திங்கள் என்றனர். மற்றவற்றை வானத்து மீன் என்று உரைத்தனர். அதை மறுத்து அவள் கூறினாள். ‘இவை திங்களின் சூடு தாங்காது வானத்தில்